Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை

ஜுலை 15, 2020 06:12

ஆவடி: ஆவடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் கொசவன்பாளையம் லட்சுமிபதி நகரை சேர்ந்தவர் பரம குரு ( 40). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் கொசவன்பாளையம் அம்பேத்கர் தெருவில் கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட சென்றார். அங்கு பரமகுரு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் பரமகுருவை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் 6 பேரும் சேர்ந்து பரமகுருவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதில் பரமகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டு வந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் குணசேகரன் மற்றும் போலீ சார் பரமகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி ஆகியோர் நேரில் வந்து விசாரணை செய்தனர்.

மேலும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சா.மு.நாசர் பூந்தமல்லி தி.மு.க. எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பரமகுரு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். கொலை செய்யப்பட்ட பரமகுருவுக்கு ஷீபா (34) என்ற மனைவியும் ரோஷன் (10) என்ற மகனும் கிரிஸ்மித்தா (3) என்ற மகளும் உள்ளனர். சம்பவ இடத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்