Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியாதான் உலகிற்கே உதவ போகிறது: அடித்துச்சொல்லும் பில் கேட்ஸ்!

ஜுலை 17, 2020 10:53

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் உலகில் இந்தியாதான் முக்கிய பங்கு வகிக்க போகிறது என்றும், உலகிற்கே இந்தியாதான் இந்த மருந்தை விற்பனை செய்ய போகிறது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவும் கோவாக்சின் உட்பட இரண்டு தடுப்பு மருந்துகளை உருவாக்கி தற்போது மனித சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது. அதிலும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து தற்போது இறுதிக்கட்ட மருந்து சோதனையில் இருக்கிறது. ஆகஸ்ட் இறுதியில் இது பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனும் இதற்கான தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பில் கேட்ஸ் இது தொடர்பாக முக்கியமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவை புகழ்ந்து அவர் முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், இந்தியாவில் உலகம் முழுக்க அனைத்து நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க முடியும். இந்தியாவில் இதற்கான வசதிகள் உள்ளது. மருந்து உற்பத்திக்காக இந்தியா மிகப்பெரிய விஷயங்களை செய்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே நிறைய தடுப்பூசிகள், மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதனால் கொரோனா தடுப்பு மருந்தையும் அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். இந்தியாவின் மனித வளம் இதற்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள், உற்பத்தி மையங்கள் இருக்கிறது. இங்கு எளிதாக கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க முடியும்.

இந்தியாவில் இருந்துதான் தற்போது உலகளவில் அதிக மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் சீரம் நிறுவனம்தான் உலகிலேயே மிகப்பெரிய மருந்து நிறுவனம் ஆகும். பாரத் பயோ டேக், பயோ இ போன்ற நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள்தான் கொரோனா வைரஸ் மருந்து தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

மற்ற நோய்களை குணப்படுத்த இவர்களிடம் பெரிய அளவில் மருந்துகள் உள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் உலகிற்கே தடுப்பு மருந்துகளை அனுப்ப முடியும். இந்தியாவில் இருக்கும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதற்கான முக்கியமான பணிகளை செய்து வருகிறது. இவர்களிடம் நவீன ஆராய்ச்சி மையங்கள், அமைப்புகள் உள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால் இந்தியா இதில் வெறும் தொடக்கத்தில்தான் இருக்கிறது. இந்தியா கொரோனாவிற்கு எதிராக சிறப்பான பணிகளை செய்து இருக்கிறது. இந்தியா மிகப்பெரிய நாடு. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. ஆனாலும் கொரோனா பரவல் நினைத்ததை விட குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் மக்கள் நெருக்கடி அதிகம் இருக்கிறது.

கடந்த 10 வருடங்களாக இந்தியாதான் தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அதனால் இந்தியாவிற்கு இப்போது என்ன தேவை, எங்கே குறைபாடு உள்ளது, கொரோனாவை எப்படி தடுப்பது என்று தெரியும். இந்தியாவிற்கு உதவ நாங்களும் தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்கு தேவைப்பட்டால் பயிற்சிகள் , உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம், பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்