Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது: முதல்வர் பழனிசாமி

ஜுலை 17, 2020 03:48

ஈரோடு: தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.  இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா காலத்தில் மக்கள் நலப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.

அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கீழ்பவானி கால்வாயை ரூ.985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை பகுதி மக்களுக்கான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஈரோடு நகருக்கான வெளிவட்ட சுற்றுச்சாலை விரைவில் அமைக்கப்படும். மேலும் கோபிசெட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திமுக போராட்டம் நடத்துகிறது. உரிய முறையில் மின்சார கணக்கீடு நடைபெறுகிறது. கொரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பேசினார்.

இதற்கிடையே எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற தொழில்துறையினருடனான கூட்டத்தில், தமிழக அரசு கடுமையான நிதிச் சுமையில் உள்ளதாகவும், தொழில்துறையினருக்கு போதிய உதவிகளை அரசு செய்யும், ஜவுளித்துறையினரின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என்று முதலமைச்சர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்