Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தை மாவட்டமாக்க கோரி கடையடைப்பு

ஜுலை 17, 2020 04:42

கும்பகோணம்: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டங்களை பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களை பிரித்து புதிய தாலுகாக்களை உருவாக்கிட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு 2 லட்சம் தபால் அட்டைகளை கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து போராட்டக்குழுவினர் அனுப்பினர். பின்னர் அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கேட்டனர். தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சியினர், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள், வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் கும்பகோணம் கோட்டத்துக்குட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களில் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூன்று வட்டங்களிலும் 15 ஆயிரம் கடைகளை நேற்று மூடி வர்த்தகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு:

கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் கூறுகையில், கும்பகோணம் ஒரு மாவட்டத்துக்கான அனைத்து தககுதிகளை பெற்றுள்ளது. புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தமிழகத்தில் சிறிய நகரங்கள் எல்லாம் மாவட்ட தலைநகரமாக அறிவிக்கப்படுவது போல், பாரம்பரியமும், அதிக வருவாயும், அதிக மக்கள் தொகையும் கொண்ட கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்