Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கந்த சஷ்டிக்கு துடிக்காதவர்கள் இப்ப துடிப்பது ஏன்?: பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச் ராஜா கேள்வி

ஜுலை 18, 2020 06:13

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை ஈ.வெ.ரா. கும்பல் அவமதித்த போது துடிக்கவில்லை. ஒரு கலப்படமற்ற இந்து விரோதி என்ற காரணத்தால். இவர்களில் யாராவது கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா? என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா மீதான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிரதானப்படுத்தி இருப்பது கந்த சஷ்டி கவசம் அவமரியாதை செய்யப்பட்டது. பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசியது என்று அரசியல் வேறு பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் சொன்ன ஆன்மீக அரசியல் கலந்து வருகிறதோ என்ற எண்ணத்தை அதிகமாக்கி இருக்கிறது. கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை அவமானப்படுத்தி, இந்துக்களின் உணர்வுகளையும் கொச்சைபடுத்தி இருப்பதாக அந்த சேனல் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சேனல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த சேனல் அந்த வீடியோவை யூ டியூபில் இருந்து நீக்கியது. இந்த வழக்கின் கீழ் இதுவரை செந்தில் வாசன் என்பவரை சென்னை வேளச்சேரியில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 30ம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்து இருக்கும் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ''கந்த சஷ்டி கவசத்தை ஈ.வெ.ரா. கும்பல் அவமதித்த போது ஏன் இவர் துடிக்கவில்லை. இவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி என்கிற காரணத்தால். இவர்களில் யாராவது கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா? கந்தன் கருணையே கருணை. 4 நாட்களில் 2 சம்பவங்கள். 4 நாட்களாக முதல் சம்பவத்திற்கு வாயே திறக்காத தலைவர்கள் இன்றைய சம்பவத்திற்கு கண்டனம். அனைவரும் இந்துக்கள் முன்பு தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டனர். வெற்றி வேல் வீர வேல். இந்துக்கள் வணங்கும் தெய்வங்களின் விக்ரகத்தை வீதியில் போட்டுடைத்தவர் பெரியாரா? மக்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டனர்'' என்று தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்