Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்மவீரர் காமராஜர் 118 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜுலை 18, 2020 12:17

பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த காலத்திலும் சரி அவர் மறைந்த பின்னரும் சரி  அவரது பெருமைகள் (புகழ்) தமிழகம் மட்டுமின்றி இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் பேசப் பட்டு வருகிறது.

உலகிலேயே மிகச்சிறந்த மனிதர்களில்,  சிறந்த ஆட்சியாளர்களில், முதன்மையானவர் என்று உலக நாடுகளால் போற்றப் படுகிறார்.
 எளிமை, நல்லெண்ணம், அவதூறு பேசுபவர்களையும் அரவணைக்கும் பண்பு, ஆட்சி செய்வதில் திறமை, போன்றவற்றில் அவருக்கு நிகர் அவரே. சுதந்திர போராட்டத்தில் அவருடைய பங்களிப்பு மகத்தானது.

ஆட்சியில் அவரது ஆட்சி உலகத்துக்கே முன் மாதிரியாக விளங்கியது. ஒரு நாடு முன்னேற முதல் தேவை கல்வி என்பதை (அவர் கல்வி கற்காவிடினும்) உணர்ந்து அதை நடைமுறையில் செயல்படுத்தி காட்டினார். கல்வி முக்கியம் என்றாலும் உணவின்றி கல்வி சாத்தியமில்லை என்று உணர்ந்து பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இவ்வாறு தமிழகமெங்கும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார்.

உணவுத் திட்டத்தை அறிவித்தால் போதுமா? உணவு உற்பத்தி வேண்டாமா? தமிழகமெங்கும் அணைகளைக் கட்டினார். இதன் மூலமாக தமிழகமெங்கும் பசுமைப் புரட்சியை  ஏற்படுத்தினார். பசுமைப் புரட்சி மட்டும் போதுமா?.  மற்ற தொழில்களில் முன்னேற்றம் வேண்டாமா? என்று உணர்ந்து பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கினார். அதன் மூலமாக தமிழகமெங்கும் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் பல மாநிலங்கள் அவரது திட்டங்களை பின்பற்றின. அவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவர் நடந்து கொண்ட விதம் நம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும். அறநூல்களை நாம் நூல் வடிவில் பார்க்கிறோம்.
தமிழகத்தில் அறநூல்களை முழுவதும் அறிந்து அதைப் பற்றி மேடைகளில் வாய்கிழியப் பேசும் அரசியல் தலைவர்கள் அந்த அறநூல்களின் அறிவுரை ஒன்றைக் கூட பின்பற்றுவதில்லை. ஆனால் அந்த நூல்களை படிக்காத நம் பெருந்தலைவர் அந்த அறநூல்கள் காட்டிய வழியில் நடந்து காட்டினார்.

மொத்தத்தில் அத்தகைய அறநூல்களின் மனித உருவாகத் திகழ்ந்தவர்  பெருந் தலைவர் காமராஜர். இப்படி நாள் முழுவதும் அவரது பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இது போதுமா? இதுவா அவரது எண்ணமாக இருந்தது?  அல்லது இருக்க முடியும்? அவரைப் போல உருவாக  முயற்சி செய்ய வேண்டாமா?ஆனால் அது முடியாது. இனியொரு தலைவன் முழுவதுமாக  அவர் போல் தோன்ற வாய்ப்பு இல்லை. அவர்  ஒரு தனிப் பிறவி. சகாப்தம். கடவுளின் அவதாரம்.

ஆனால், அவரது பொதுப் பணிகளில்  ஆயிரத்தில் ஒருபங்காவது நாம்  முன்னெடுத்து பணி செய்ய முயற்சி செய்ய வேண்டாமா?. அது நிச்சயமாக முடியும். பெரியவர்கள் மட்டுமின்றி இன்று இளைய சமுதாயமும் பெருந்தலைவரின் வரலாற்றை அறிந்து வியந்து நிற்கிறது. இப்படி ஒரு மனிதன் நமது தமிழகத்தை ஆண்டானா?. என்று ஆச்சர்யப்படுகிறது!

ஆகவே இளைய சமுதாயமே. பெருந்தலைவர் காமராஜர் பெருமைகளை  எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்!
அதுமட்டுமல்ல, அவரது பண்புகள், நமது நாட்டுக்கு ஆற்றிய பணிகளில்  ஒரு சிலவற்றை யாவது பின்பற்றி நடக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நாட்டுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக அமையும். என்றென்றும் காமராஜர் புகழ் வாழ்க! வளர்க!

அன்பைக் கண்டோம்  அம்மாவிடம்!
ஆற்றலைப் பெற்றோம் அப்பாவிடம்!
இரக்கத்தை கண்டோம்  உறவுகளிடம்!
ஈகையைக் கண்டோம்  வள்ளலிடம்!
உண்மையைக் கண்டோம்  நண்பனிடம்!
எளிமையைக் கண்டோம் ஏழையிடம்!
ஏற்றிவிடும்  ஏணியைக்  கண்டோம்!
கம்பீரத்தை கண்டோம்   வீரனிடம்!
அறிவைக் கண்டோம் கற்றவனிடம்!
ஆளுமையைக் கண்டோம் அரசனிடம்!
இவை அனைத்தும்  கண்டோம் ஒருவரிடம்!
அவர் தான் நம் தலைவர்! பெருந்தலைவர் காமராஜர்!!

 - திருப்பூர் எல்.வரதராஜன்
தேசிய வியாபாரிகள் சங்க பேரவை நிறுவன தலைவர்

தலைப்புச்செய்திகள்