Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரை பேரம்: வெளியான ஆடியோவால் தரகர் சஞ்சய் ஜெயின் கைது

ஜுலை 18, 2020 12:27

புதுடெல்லி: காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று இருக்கும் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது வரும் 21ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் சஞ்சய் ஜெயின் என்பவரை ராஜஸ்தான் மாநிலத்தின் சிறப்பு போலீஸ் பிரிவு கைது செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் பேசியதாகவும் அதுதொடபான இரண்டு ஆடியோக்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோவில் பேசி இருப்பது பா.ஜ.க. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சஞ்சய் ஜெயின், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரி லால் சர்மா என்று ரந்தீப் சிங் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்த அமைச்சர் கஜேந்திர சிங், அந்த ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்றும், விசாரணைக்கு தான் தயார் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் அந்த ஆடியோவில் இருக்கும் சஞ்சய் ஜெயின் பற்றி தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் வைத்து சஞ்சய் ஜெயின் மற்றும் சஞ்சய் பர்தியா இருவரையும் சிறப்பு போலீஸ் பிரிவினர் கைது செய்தனர். இவர்கள் மீது 124A, 120B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சஞ்சய் ஜெயின் யார்? என்பது குறித்து காங்கிரஸ், பா.ஜ.க. இடையே விவாதம் ஏற்பட்டது. சஞ்சய் ஜெயின் பா.ஜ.க. கிடையாது, காங்கிரஸ் ப்ளாக் தலைவர் என்று கஜேந்திர சிங் தெரிவித்து இருந்தார். ஆனால், எம்.எல்.ஏ.க்களை விலை பேசி குதிரை பேரம் நடத்தியதில் தரகராக இருந்து செயல்பட்டவர் இந்த சஞ்சய் ஜெயின்தான் என்றும், இவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்றும் காங்கிரஸ் தெரிவித்து இருந்தது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், சஞ்சய் ஜெயின் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருந்தனர். மேலும் காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி மீதும் பதித்து இருந்தனர். இவரும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க மும்பையில் இருக்கும் வர்த்தகரிடம் இருந்து பணம் வந்ததாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் சாவந்த் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்திருந்தார்.

யாரிடம் வாங்கி, எவ்வாறு ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு, அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்று அனில் தேஷ்முக் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி மீது போலீசில் பா.ஜ.க.வைச் சேர்ந்த லட்சுமிகாந்த் பரத்வாஜ் புகார் கொடுத்துள்ளார். ''ஆடியோ குறித்த வழக்கு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல; சென்சிடிவ் ஆன விஷயமும் இல்லை,'' என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்