Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியார் சிலை அவமதிப்பு: தமிழில் ட்வீட் வெளியிட்ட ராகுல் காந்தி

ஜுலை 18, 2020 12:29

புதுடெல்லி: "எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது," என்று பெரியார் சிலை களங்கப்படுத்தப்பட்டது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

கோவை மாநகரின் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. பெரியார் இயக்கங்களின் போராட்டங்கள், சிந்தனை நிகழ்வுகள் போன்றவை இங்கு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், திடீரென பெரியார் சிலை மீது யாரோ சிலர் காவி சாயத்தைப் பூசி விட்டு சென்றுள்ளனர். இதை அறிந்ததும் பெரியார் அமைப்பினர் அங்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். காவி சாயம் பூசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க.வின் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுபற்றி கேட்டபோது, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோவை, போத்தனூர், காவல் நிலையத்தில் அருண் கிருஷ்ணன் என்பவர் இந்த சம்பவம் தொடர்பாக சரணடைந்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார். No amount of hate can ever deface a giant.என்று ஆங்கிலத்திலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இப்பிரச்சினை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்