Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக.,வை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சிக்கின்றனர்: ஸ்டாலின் வேதனை

ஜுலை 20, 2020 01:37

சென்னை: திமுக.,வை ஹிந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சில எம்எல்ஏ.,க்கள் அமைச்சர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் திமுக.,வை சேர்ந்த 3 எம்எல்ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், கந்த சஷ்டி விவகாரத்தில் கருப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதாக டுவிட்டரில் போலி தகவல் பதிவிடப்பட்டதாக, திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛திமுக.,வை ஹிந்து விரோதி என சித்தரிக்க முயற்சி. ஹிந்து விரோதிகள் என கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள். ஆனால், பெரும்பான்மை ஹிந்துக்களுக்கான ஓபிசி.,க்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக திமுக சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: திமுக எனும் மிகப்பெரும் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பிலே உங்களால் உங்களுக்காக அமரவைக்கப்பட்டிருந்தாலும், நான் எப்போதும் உங்களில் ஒருவன்தான். கொரோனா எனும் உலகை உலுக்கும் நோய்த்தொற்றின் காரணமாக, இந்த ஊரடங்குக் காலத்தில் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு முன்புபோல் அமையவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கிடும் வகையில், ஒவ்வொரு நாளும் காணொலி வாயிலாகக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடுவதில் ஓரளவு மனதுக்கு நிம்மதி.

அந்த நிம்மதிகூட நிலைத்திடாத வகையில், கொரோனா பரவல் பற்றிய செய்திகள் அனுதினமும் வேதனை தருகின்றன. சீனாவை விட சென்னையில் நோய்த்தொற்று அதிகம் எனப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தினாலும், தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர்களுக்கே கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும் முதல்வர் பழனிசாமி, “தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை. கொரோனா விரைவில் ஒழிந்துவிடும்” என்பதை மட்டுமே 'கீறல் விழுந்த கிராமபோன் ரெக்கார்டு' போல, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்.

நேற்று காணொலியில் உரையாடிய ஓர் உடன்பிறப்பு, இன்று நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் எனச் செய்தி வரும்போது நெஞ்சம் பதறுகிறது. மூவர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அறிந்ததும் வேதனையும் மனச்சோர்வும் அதிகமானது. என்ன செய்வதென்று அறியாமல், எனது அறையிலிருந்த கருணாநிதியின் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
உடனடியாக அவர்களைத் தொடர்புகொண்டு நம்பிக்கையும் ஆறுதலும் தெரிவிப்பதுடன், அவர்களின் குடும்பத்தாரிடமும் பேசி, அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடமும் நாள்தோறும் பேசி நலன் தெரிந்துகொள்வதையே முதன்மையான பணியாகக் கொண்டிருக்கிறேன். மருத்துவர்களிடம் பேசி, சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தேன். எப்போதும்போல் கட்சி துணை நிற்கும் என்ற உறுதியினையும் நம்பிக்கையினையும் வழங்கினேன். இந்த உறவுக்குப் பெயர்தானே திமுக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்