Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி 130 கோடி மக்களின் ஆழ்மனதில் இருக்கிறார்: ராகுலுக்கு நட்டா பதிலடி

ஜுலை 21, 2020 05:41

புதுடெல்லி: பிரதமர் மோடி 130 கோடி மக்களின் ஆழ்மனதில் இருக்கிறார். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, சேற்றை வாரி இறைக்கும் வேலையில் ராகுல் தொடர்ந்து ஈடுபடுகிறார் என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ராகுலுக்கு பதிலடி தந்துள்ளார்.

பிரதமர் மோடியையும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும், காங்., எம்.பி., ராகுல், விமர்சித்திருந்தார். இதுகுறித்து டுவிட்டர் பதிவிலும், வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார். ராகுலுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டுவிட்டரில் தக்க பதிலடி தந்துள்ளார்.

இதுகுறித்து நட்டா டுவிட்டரில் பதிவிட்டதாவது: ராகுல் வழக்கம்போல உண்மையில்லாத, சேற்றை வாரி இறைக்கும் குற்றச்சாட்டை கூறுகிறார். 1962ம் ஆண்டு ஒரு குடும்பம் பாதுகாப்புத்துறை, வெளியுறவுக் கொள்கைகளை அரசியலாக்க முயற்சித்த செய்த பாவங்களை கழுக முயற்சிக்கிறது. அந்த பாவங்கள் தான் இந்தியாவை பலவீனப்படுத்தின.

பிரதமர் மோடியின் பிம்பத்தை சிதைக்க ஒரு பரம்பரை தான் முயற்சித்து வருகிறது. 130 கோடி மக்களின் ஆழ்மனதில் இருக்கிறார் பிரதமர் மோடி. மக்களுக்காகவே வாழும், அவர்களுக்காகவே பணியாற்றும் மோடியை யார் அழிக்க நினைக்கிறார்களோ, அவர்களை அவர்களின் சொந்த கட்சிகாரர்களே அழித்து கொண்டிருக்கிறார்கள்.

1950ல் ஒரு பரம்பரை சீனாவில் முதலீடுகளை செய்கிறது. அவர்கள் தற்போது சீனாவுக்கு கைமாறு செய்து கொண்டிருக்கிறார்கள். 2008 புரிந்துணர்வு ஒப்பந்தம், ராஜிவ் அறக்கட்டளை நிதியை நினைத்து பாருங்கள். 1962ல் நடந்ததை நினையுங்கள். இந்திய ராணுவத்தை நம்புவதற்கு பதில், சீனாவின் பார்டையிலிருந்து ராகுல் பேசுகிறார். இந்தியாவை பலவீனப்படுத்தி, சீனாவை பலமாக்க ஒரு பரம்பரை விரும்புகிறது. இவ்வாறு அவர் பதிலடி தந்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்