Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் நிவாரண நிதி: இதுவரை ரூ.394.14 கோடி வசூல்

ஜுலை 23, 2020 07:16

சென்னை : முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, இதுவரை, 394.14 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதியுதவி வழங்கும்படி, முதல்வர் இ.பி.எஸ்., கோரிக்கை விடுத்தார்.அதை ஏற்று, அரசு ஊழியர்கள், தொழில் நிறுவனங்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன. மே, 14 வரை, 367.05 கோடி ரூபாய் நிதி வரப்பெற்றது.

மே, 15 முதல் நேற்று முன்தினம் வரை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், 5 கோடி ரூபாய்; தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள், 2.53 கோடி ரூபாய்; சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர், 1.50 கோடி ரூபாய்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைப் பணியாளர்கள், 90.29 லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்கினர்.

லட்சுமி விலாஸ் வங்கி சார்பில், 44.15 லட்சம் ரூபாய்; தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் சார்பில், 42.47 லட்சம் ரூபாய்; ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் ஊழியர்கள், 15.13 லட்சம் ரூபாய்; குடிசை மாற்று வாரிய ஊழியர்கள், 11.96 லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்கினர்.நேற்று முன்தினம் வரை, 394.14 கோடி ரூபாய் நிவாரண நிதி, அரசுக்கு கிடைத்துள்ளது.

கடலுார் மாவட்டம், ஒரத்துார் கிராமத்தை சேர்ந்த, தமிழ்செல்வன் மகன் நரேந்திரன், மகள் நிரஞ்சனா ஆகியோர், உண்டியலில், 80 ஆயிரம் வரை சேமித்துவைத்திருந்தனர். இந்த பணத்தை வைத்து, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள் மற்றும் வறுமையில் வாடும் சிறுவர்களுக்கு, 40 நாட்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியுள்ளனர்.

சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி லக் ஷா, தன் சேமிப்பு பணம், 10 ஆயிரம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். நிவாரண உதவி வழங்கிய அனைவருக்கும், முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஐ.டி.சி., நிறுவனம் சார்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும், ஏழை குடும்பங்களுக்கு, 1.59 கோடி ரூபாய் செலவில், உணவுப்பொருட்கள், ரேஷன் பொருட்கள், சானிடைசர், பொது மருத்துவமனை மருத்துவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர். இதற்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்