Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஜுலை 23, 2020 07:47

புதுடெல்லி: இந்தியாவில், இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக கொரோனா தொற்று, 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,38,635 ஆகவும், மரணம் 29,861 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் சதவீதம் 63.18 சதவீதமாக உள்ளதாகவும், தற்போது வரை 7.82 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் விகிதம் 13.03 ஆக உள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில், தமிழகம், டில்லி, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.

அதேபோல், நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 518 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த உயிரிழப்புகளில் மார்ச் 1 முதல் ஜூன் 1வரையிலான காலகட்டத்தில் 444 விடுபட்ட மரணங்கள், மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் படி சேர்க்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்த 5 முக்கிய அம்சங்கள்

01.மஹாராஷ்டிராவில், நேற்று (ஜூலை 23), ஒரே நாளில் 10,576 பேருக்கு கொரோனா உறுதியானது. அங்கு, ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாவது இது முதல்முறையாகும். இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,37,607 ஆக அதிகரித்துள்ளது.

02. அதேபோல், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 5,849 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.86 லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

03. ஆந்திராவில் ஒரே நாளில் 6,045 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமாக பாதிப்பை அம்மாநிலம் முதன்முறையாக பதிவு செய்துள்ளது.

04. உயிரிழப்புகளில் மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 280 பேர் பலியாகியுள்ளனர்.

05. இந்தியாவில் நேற்று (ஜூலை 23)இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,50,823 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1.5 கோடி மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்