Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா: 88 பேர் பலி

ஜுலை 23, 2020 03:10

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 23) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆகவும், பலி எண்ணிக்கை 3,232 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,423 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 49 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 62,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 21 லட்சத்து 57 ஆயிரத்து 869 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,933 பேர் ஆண்கள், 2,539 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,17,252 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 75,689 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 793 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,232 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,699 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1.59,384 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 ஆயிரத்து 881 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்