Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கால் வருமானம் இல்லை: கணவன்-மனைவி தற்கொலை

ஜுலை 24, 2020 06:40

சென்னை : ஊரடங்கில் வருமானம் இல்லாமல் தவித்தபோது மகன்களும் பண உதவி செய்ய மறுத்ததால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
சென்னை பெரம்பூர் செம்பியம் மேல்பட்டி பொன்னையன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் குணசேகரன் (65). இவருடைய மனைவி செல்வி (54). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2 மகன்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

கடைசி மகன் ஸ்ரீதர் (29) தனது தாய்-தந்தையுடன் வசித்து வருகிறார். குணசேகரன் தச்சுவேலை செய்து வந்தார். சரிவர வேலை கிடைக்காததால் தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை செய்து வந்தார். ஊரடங்கு நேரத்தில் மகன் ஸ்ரீதரும் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி சரியாக வேலைக்கு எதுவும் செல்லவில்லை.

ஊரடங்கு நேரத்தில் குணசேகரனுக்கும் வேலை இல்லாததால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் பரிதவித்து வந்தார். வருமானம் இல்லாததால் வீட்டு வாடகையையும் கொடுக்க முடியாமல் தவித்தார். தன் மகன்களிடம் வீட்டு வாடகை கொடுக்கவும் குடும்ப செலவுக்கும் பண உதவி கேட்டதாகவும் ஆனால் அதற்கு அவர்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மகன்கள் பண உதவி செய்யாததால் மனமுடைந்த குணசேகரன் செல்வி இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வெளியே சென்று இருந்த ஸ்ரீதர் வீட்டுக்கு வந்தபோது தனது தாய்-தந்தை இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்த செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேந்திரன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்னதாக குணசேகரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர் “எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுடைய இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது. போலீசாரே இறுதிச்சடங்கு செய்யவேண்டும்” என அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மகன்கள் பண உதவி செய்யாததால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்