Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை மிரட்டி பறித்த ரவுடி படுகொலை

ஜுலை 24, 2020 06:56

திண்டுக்கல்: சின்னாளபட்டியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை தொழிலாளியிடம் இருந்து தட்டிப்பறித்த ரவுடி கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுப்பட்டி பகுதியில் ராமநாதபுரம் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் வாசல் முன்பு தலைப்பகுதி சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெரிய கல் ஒன்றும் கிடந்தது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சின்னாளபட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டவர் சின்னாளபட்டியை சேர்ந்த பிரபல ரவுடி சரவணன் என்ற பூண்டி சரவணன்(44) என்பது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே கொள்ளை நகைபறிப்பு போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பதும் திண்டுக்கல் திருப்பூர் கோவை மாவட்டங்களில் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் 2014-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது டாஸ்மாக் கடைக்கு பின்னால் உள்ள தோட்டங்கள் வழியாக ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கல்லில் பதிந்து இருந்த ரேகையை பதிவு செய்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த கொலை குறித்து சின்னாளபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் இருந்த கண்காணிப்புகேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கோபி (38) என்பவர் தலையில் துண்டை கட்டியபடி மதுக்கடை வாசலில் போதை மயக்கத்தில் தூங்கி கொண்டிருந்த சரவணனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டிருந்த கோபியை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு;

ரவுடி சரவணன் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு மது வாங்க வருபவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து மதுவை பிடுங்கி கொண்டு இருந்தார். அப்போது டாஸ்மாக் கடையில் கோபி வாங்கிய மதுவையும் சரவணன் மிரட்டி தட்டிப்பறித்தார். இதனால் கோபி ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் கோபி அந்த டாஸ்மாக் கடை வழியாக வந்தார். அப்போது சரவணன் போதை மயக்கத்தில் மதுக்கடை வாசலில் தூங்கி கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் கோபிக்கு ‘என்னிடம் தட்டிப் பறித்த மதுவை குடித்துவிட்டு போதை மயக்கத்தில் நீ இருக்கிறாய் நான் மட்டும் தூக்கமில்லாமல் அலைவதா’ என மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோபி அருகில் இருந்த ஒரு பெரிய கல்லைத்தூக்கி சரவணன் தலையில் போட்டார். இதில் சரவணன் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

தொடர்ந்து போலீசார் கோபியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்