Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.2,000 கோடி ஊழல்: பா.ஜ. அரசு மீது காங். பகீர் குற்றச்சாட்டு

ஜுலை 24, 2020 07:05

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2,000 கோடிக்குக்கும் மேல் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது, இதுவரை ரூ.500 கோடி மட்டுமே செலவிடப்பட்டு இருப்பதாக பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தற்போது கொரொனோ தொற்று அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் பா.ஜ.க. அரசு மோசடி செய்து இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். விலையில் மோசடி செய்து அரசின் கருவூலத்தில் இருந்து ரூ.2,000 கோடிக்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது குற்றச்சாட்டில், ''மாநில அரசின் பல்வேறு துறைகளால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ரூ.4,100 கோடிக்கு மருத்துவம் உபகரணங்கள் வாங்கப்பட்டது. வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் தமிழக அரசைப் போல இவர்களும், வாங்கிய விலையை விட அதிகரித்து காட்டியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும், பி.பி.ஈ. கிட், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை வாங்குவதற்கு ரூ.324 கோடி செலவிட்டுள்ளனர். ஆனால், ரூ.4,000 கோடிக்கும் மேல் அதிகரித்து காட்டியுள்ளனர். இதில் மோசடி நடந்துள்ளது. மோசடி செய்த பணம் அமைச்சர்களின் பாக்கெட்டுக்குள் சென்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும்,'' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கொடுத்து இருக்கும் குற்றச்சாட்டில், ''கர்நாடகா சுகாதாரத்துறை ரூ.700 கோடியும், ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிக் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ரூ.200 கோடியும், மருத்துவக் கல்வித்துறை ரூ.815 கோடியும், மாநில பேரிடர் படை ரூ.742 கோடியும், தொழிலாளர் துறை ரூ.1,000 கோடியும், சமூக நலத்துறை ரூ.500 கோடியும், கொரோனா மையத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.160 கோடியும், மத்திய அரசிடம் இருந்து உபகரணங்கள் வாங்கியதற்கு ரூ.50 கோடியும் செலவிடப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் வாங்கிய பில்களில் மோசடி செய்து கூடுதல் விலை காட்டியுள்ளனர். தமிழக அரசு ஒரு வென்டிலேட்டரை 4.78 லட்சம் என்ற விலையில் வாங்கி இருக்கிறது. ஆனால், கர்நாடகா அரசு குறைந்தபட்சம் 5.6 லட்சம் என்ற விலைக்கும், அதிகபட்சம் 18.2 லட்சம் என்ற விலைக்கும் வாங்கி உள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா காலத்திலும் பணம் அடிப்பதில் பா.ஜ.க. கட்சி இறங்கியுள்ளது என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து இருக்கும் கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத்நாராயணன், ''வென்டிலேட்டர்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. ரூ.4 லட்சத்தில் துவங்கி ரூ.60 லட்சம் வரை செல்கிறது. மாடல்கள் அதில் கிடைக்கும் கூடுதல் அம்சங்களைப் பொருத்து விலை மாறுபடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் என்ன விலைக்கு வாங்கினார்கள் என்பதையும் அவர்கள் கூற வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா உபகரணங்களுக்கு இதுவரை ரூ.500 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியங்கள், ஓட்டுநர்கள், புலம் பெயர்ந்தவர்களுக்கு மானியம் வழங்கியது என்று மொத்தம் இதுவரை ரூ.2,117 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ளது. எந்த விசாரணைக்கும் தாங்கள் தயார் என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்