Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தைகளின் ஆன் லைன் படிப்புக்காக... பசு மாட்டை விற்று ஸ்மார்ட் போன் வாங்கிய தந்தை

ஜுலை 24, 2020 07:10

பாலம்பூர்: தன்னுடைய இரண்டு குழந்தைகள் ஆன் லைனில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்துக்கு ஒரே வருமானம் அளித்து வந்த பசு மாட்டை விற்று ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்த இலாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த தந்தைக்கு வாழ்த்துக்களும், உதவியும் குவிந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நகரங்களில் இருந்து கிராமங்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வியை ஆன் லைனில் கற்று வருகின்றனர். பள்ளிக்கு செல்ல முடியாத சூழலில் பெற்றோருக்கும் இது ஒரு சுமையாக அமைந்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் கிராமங்களில் இருப்பதால் அவர்களுக்கு செல்போன் அல்லது கம்ப்யூட்டர் வசதி இல்லை. ஆனாலும், ஆன் லைனில் பாடம் கற்பிப்பதை தவிர்க்க முடியாத நிலையில் பள்ளிகளும் எதிர்கொண்டு வருகின்றன.

அதேசமயம் நகரங்களில் மட்டும்தான் நெட்வொர்க் நன்றாக கிடைக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் இன்னும் நெட்வொர்க் சென்றடையவில்லை அல்லது கிடைப்பதில்லை. இந்நிலையில் தங்களது குழந்தைகளின் கல்வி எந்த வகையிலும் பாதித்து விடக்கூடாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருதி வருகின்றனர். இதற்காக அவர்கள் கடன் பெற்றாவது கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுகின்றனர்.

அந்த வரிசையில் இமாசலப்பிரதேசத்தில் ஜூவலமுகியில் இருக்கும் கும்மர் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் குமார். இவரது இரண்டு குழந்தைகள் அன்னு, திப்பு. இவர்கள் இருவரும் நான்கு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு ஆன் லைன் வகுப்புதான் என்ற நிலை ஏற்பட்ட பின்னர், இவர் செல்போன் வாங்குவதற்கு வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள் என்று கடன் கேட்டு அலைந்துள்ளார். ஆனால், இவரது குடும்ப ஏழ்மை காரணமாக கடன் கொடுக்க யாரும் முன் வரவில்லை.
தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து குல்தீப்புக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆன் லைனில் பாடம் கற்பிக்க வசதியாக ஸ்மார்ட் போன் வாங்குமாறு வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் தனது குடும்பத்துக்கு ஒரே வருமானம் அளித்து வந்த தனது பசு மாட்டை ரூ.6,000த்துக்கு குல்தீப் விற்றார்.

இச்சம்பவம் அந்தப் பகுதியில் மட்டுமின்றி நாடு முழுவதும் அறிய வந்து ஒரு பக்கம் அவரை பாராட்டினாலும், அவருக்கு ஏற்பட்ட அழுத்தத்தையும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விஷயம் அறிந்த ஜூவலமுகி எம்.எல்.ஏ. ரமேஷ் தவலா கூறுகையில், குல்தீப் விஷயம் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு உடனடியாக நிதியுதவி செய்யுமாறு பி.டி.ஓ. எஸ்.டி.எம். இருவருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவ, பலரும் இவருக்கு உதவ முன் வந்துள்ளனர். 
சிலர் ஏழை பெற்றோரின் மீது ஏற்பட்டு இருக்கும் மன அழுத்தம், நிதி அழுத்தம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். நம் நாட்டின் கல்வித்தரம், சுகாதார வசதிகள் ஆகியவற்றை கொரோனா கால கட்டம் கேள்வி எழுப்பியுள்ளது என்று பதிவிட்டுள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்