Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம்: அரசு உத்தரவு

ஜுலை 24, 2020 07:41

புதுடெல்லி : ராணுவத்தில், பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர ஆணையம் அமைக்க, ராணுவ அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பாதுகாப்பு துறையில், 'ஷார்ட் சர்வீஸ் கமிஷன்' மற்றும் 'பெர்மனென்ட் சர்வீஸ் கமிஷன்' என்ற இரு ஆணையங்களின் கீழ், குறுகிய காலம் மற்றும் நிரந்தர பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதில், பெண்கள் குறுகிய காலம் மட்டும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். ஆண்கள், நிரந்த பணிகளின் கீழ், ஓய்வு காலம் வரை பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எட்டு பெண் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம், 2010ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 'ஆண்களுக்கு நிகராக, பெண்களும் ஓய்வு காலம் வரை நிரந்தரமாக பணியாற்ற, பெண்களுக்கு நிரந்தர ஆணையம் உருவாக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து, ராணுவ துறை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில், 2019, நவ.,ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 'ராணுவத்தில், ஆண் அதிகாரிகளுக்கு நிகராக, பெண் அதிகாரிகளுக்கும் தங்கள் ஓய்வு காலம் வரை பணியாற்றும் வகையில், நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று, ராணுவ அமைச்சகம், ராணுவத்தில் குறுகிய கால பணியில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர ஆணையம் அமைக்கும் உத்தரவை நேற்று பிறப்பித்தது.

இது குறித்து, ராணுவ செய்தி தொடர்பாளர், அமன் ஆனந்த் கூறியதாவது:குறுகிய கால ஆணையம் வாயிலாக ராணுவ அதிகாரிகளாக உள்ள பெண்களுக்கு, நிரந்தர ஆணையம் அமைக்க, ராணுவ அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு இணையாக, பெண் அதிகாரிகளும், முக்கிய, 10 பொறுப்புகளில் ஓய்வு காலம் வரை பணியாற்றலாம்.பெண் அதிகாரிகள் தற்போது, நீதிபதி, அட்வகேட் ஜெனரல், ராணுவ கல்விப் பிரிவு ஆகியவற்றில் உள்ளனர்.

இனி, ராணுவ வான் தடுப்பு பிரிவு, சிக்னல், பொறியாளர்கள், ராணுவ விமான போக்குவரத்து, மின்னணு மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள், ராணுவ பீரங்கிப் பிரிவு, ராணுவ சேவை பிரிவு, உளவு பிரிவு உள்ளிட்ட, 10 பொறுப்புகளிலும் பணியமர்த்தப்படுவர்.இப்பொறுப்புகளுக்கு, குறுகிய கால பணியில் உள்ள ராணுவ பெண் அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை, தேர்வு வாரியம் பரிசீலித்து, தகுதியானோருக்கு புதிய பொறுப்புகளை ஒதுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்