Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பீதி: சிறையில் தானே சமைத்து சாப்பிடும் சசிகலா?

ஜுலை 25, 2020 06:49

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா தனியாக சமைத்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை சிறைத்துறை நிர்வாகம் மறுத்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகள், சிறைத் துறை அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் கொரோனா பாதிப்பு காரணமாக சசிகலா, இளவரசி ஆகியோர் தனியாக சமைத்து சாப்பிட அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை சிறைத் துறை அதிகாரிகள் மறுத்தனர். மேலும் தனியாக சமைத்து சாப்பிடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சசிகலாவுக்கு சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக அப்போதைய சிறைத் துறை அதிகாரி ரூபா பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார். சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சசிகலாவின் அறையில் குக்கர், இன்டக்ஷன் ஸ்டவ், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவும் ரூபா குற்றம்சாட்டினார். அது போல் சிறையிலிருந்து அவரும் இளவரசியும் ஷாப்பிங் சென்ற வீடியோவும் வைரலானது. இந்நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது.

தற்போது அவர் நல்லெண்ண அடிப்படையில் தண்டனை காலம் முடியும் முன்பாகவே விடுதலை செய்யப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வாறு வரும் அவர் அ.தி.மு.க.வின் தலைமை பதவியை கைப்பற்றுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சசிகலாவுக்கு அவரது குடும்பத்தினருக்கும் கட்சியில் இடம் இல்லை என்ற முடிவில் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்