Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தைகளை வைத்து உடலில் ஓவியம் வரைந்த சர்ச்சை: ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

ஜுலை 25, 2020 07:14

திருவனந்தபுரம் : குழந்தைகளை வைத்து தன் அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து, சமூக ஊடகங்களில் 'வீடியோ' வெளியிட்ட வழக்கில், ரெஹானா பாத்திமாவின் முன் ஜாமின் மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. கடந்த 2018ல் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் அய்யப்ப பக்தர்களை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

பெண் உரிமை ஆர்வலர் என கூறிக்கொள்ளும் இவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 'உடல் மற்றும் அரசியல்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் பாத்திமா அரை நிர்வாணமாக படுத்திருக்கிறார். அவரது 14 மற்றும் எட்டு வயதான குழந்தைகள் பாத்திமாவின் உடலில் ஓவியம் வரையும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுபற்றி பா.ஜ.வை சேர்ந்த அருண் பிரகாஷ் கேரள போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் திருவல்லா போலீசார் பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமின் கோரி பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில் 'குழந்தைகளுக்கு பாலியல் கல்வியும் உடல் மீதான புரிதலும் அவசியம்; அதனால் என் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவே எனது உடலில் படம் வரைய வைத்தேன்' என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி உன்னிக்கிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறியதாவது: குழந்தைகள் பாலியல் கல்விக் கொடுக்க விரும்பியிருந்தால் அதை தன் வீட்டுக்குள் செய்திருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதை நியாயப்படுத்த முடியாது. அதை நாகரீகமாகவும் கருத முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

தலைப்புச்செய்திகள்