Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா: மரத்தடியில் நடந்த சட்டசபை கூட்டம்

ஜுலை 26, 2020 06:56

புதுச்சேரி: புதுச்சேரி எம்.எல்.ஏ., கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், சட்டசபையின் மைய மண்டபம் மூடப்பட்டது. இதனால், புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக, மரத்தடியில் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், 20ம் தேதி துவங்கியது.

சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ., ஜெயபால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது நேற்று முன்தினம் உறுதியானது. உடனடியாக, தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சட்டசபையின் மைய மண்டபத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், அது, முழுவதுமாக மூடப்பட்டது. மேலும், சட்டசபை வளாகம் முழுவதும், கிருமி நாசினி தெளித்து துாய்மைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். சட்டசபை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், சட்டசபையை நடத்துவது என்றும், பட்ஜெட் மீது பொது விவாதம் நடத்தி, சபையின் ஒப்புதலை பெறுவது என, முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, சட்டசபை வளாகத்தின் முகப்பில், வேப்ப மரத்தடியில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு, பந்தலின் நடுவில் சபாநாயகருக்கு இருக்கை போடப்பட்டது. அவருக்கு இரண்டு பக்கத்திலும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் போடப்பட்டன.

நேற்று மதியம், 1:30 மணிக்கு, திருக்குறள் வாசித்து சபை அலுவல்களை துவக்கிய சபாநாயகர் சிவக்கொழுந்து, ''கடந்த காலங்களில், நம் தலைவர்கள் மரத்தடியில் நின்று உரை நிகழ்த்தி உள்ளனர். அதுபோல, இங்கே மாற்றப்பட்டுள்ள சபையில், உறுப்பினர்கள் பேசலாம்,'' என்றார்.திறந்தவெளியில் மதியம், 1:30 மணிக்கு துவங்கிய சட்டசபையின் அலுவல்கள், மாலை, 3:45 மணிக்கு நிறைவடைந்தன. சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக, சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். புதுச்சேரி வரலாற்றில் முதன் முறையாக மரத்தடியில், சட்டசபை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்