Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை பரப்பக்கூடாது: பிரதமர் மோடி

ஜுலை 26, 2020 07:29

புதுடெல்லி: நாட்டின் நலனுக்கு எதிரான விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பும் தவறை செய்யக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கார்கில் போரில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு சமூக வலைதளங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

21 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில், நமது ராணுவம் கார்கில் போரில் வெற்றி பெற்றது. அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்பியது. ஆனால், எந்தவித காரணமும் இல்லாமல் அனைத்து தரப்பினருடனும் பகையை வைத்திருக்கவே அந்நாடு விரும்பியது.

ஒட்டு மொத்த உலகமுமே, இந்திய வீரர்களின் திறமையையும், வீரத்தையும் பார்த்தது. கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் நிலத்தை பிடிக்கவும், உள்நாட்டு குழப்பத்திலிருந்து திசைதிருப்பவும், மோசமான திட்டங்களுடன் பாகிஸ்தான் கார்கில் போரை துவக்கியது. நாட்டிற்கு எதிரான விஷயங்களை, சமூக வலைதளங்களில் பரப்பும் தவறை செய்யக்கூடாது.நாடு ஒற்றுமையாக இருக்க அனைத்தையும் செய்வோம்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம், மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் சிறப்பாக உள்ளது. இறப்பு விகிதமும் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளது. நாம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியிருந்தாம், கொரோனா அச்சுறுத்தல் முடியவில்லை. பல பகுதிகளுக்கும் வேகமாக பரவுகிறது. இதனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியாததால், மக்கள் எப்போதும் மாஸ்க் அணிய வேண்டும். அசவுகரியமாக இருந்தாலும், கொரோனாவை தடுக்க மாஸ்க் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்