Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் செயல்படும் கும்பல்

ஜுலை 26, 2020 07:51

சென்னை: தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் செயல்படுகிறது என்று கூறியிருந்ததை அடுத்து, இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆவேசமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படம், தில் பெச்சாரா. இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
படம்பற்றி ரகுமான் அளித்த பேட்டி ஒன்றில், 'பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால், என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல், தவறானச் செய்திகளைப் பரப்பி வருகிறது. தில் பெச்சாரா படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார்.

இரண்டு நாட்களில் அவரிடம் நான்குப் பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், பலர் உங்களிடம் போக வேண்டாம் என்று சொன்னார்கள். அவர்கள் பல கதைகளை சொன்னார்கள் என்று கூறினார். அப்போதுதான் இது எனக்குப் புரிந்தது. பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன் என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது. 

இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். சமுக வலைதளங்களில் #ARRahman என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். அதில் அவருக்கு ஆதரவாகப் பலர் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பலர் பாலிவுட்டை கடுமையாகச் சாடியுள்ளனர்.

ஒருவர், இந்தி சினிமா இன்டஸ்ட்ரியில் ஆஸ்கர் விருதுபெற்ற ஓர் இசை அமைப்பாளருக்கு நேரும் கதியை பாருங்கள். இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. நீங்கள் (பாலிவுட்) அவருக்கும் அவர் இசைக்கும் தகுதியானவர்கள் இல்லை என்று கூறியுள்ளார். சிலர் அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். இருந்தும் அவர் பற்றி பொய்களையும் வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள். இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை என கூறியுள்ளனர்.

ஒரு நெட்டிசன், இது பாலிவுட்டுக்கு அவமானமானது. ஏ.ஆர்.ரகுமான் போன்ற ஒருவர், பாலிவுட்டில், இப்படியொரு நிலைமை இருக்கிறது என்பதை சொல்வதை நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். இன்னொருவர், ஆஸ்கர் விருதுபெற்ற, உலகம் அறிந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண நடிகர், நடிகைகளின் நிலைமையை யோசித்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்