Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன் கீ பாத் நிகழ்ச்சியில், நாமக்கல் மாணவியிடம் உரையாடிய பிரதமர் மோடி!

ஜுலை 27, 2020 06:48

சென்னை: பிளஸ் 2 தேர்வில், 490 மதிப்பெண்கள் பெற்ற, நாமக்கல், பரமத்தி சாலை இ.பி., காலனியில் வசிக்கும், டேங்கர் லாரி டிரைவர் நடராஜன் மகள் கனிகாவிடமும், பிரதமர் மோடி உரையாடினார்.

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, வானொலியில், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். நேற்று தமிழக மாணவி கனிகாவிடமும், பிரதமர் மோடி உரையாடினார்.

அந்த உரையாடலின் தொகுப்பு:

பிரதமர்: கனிகா ஜி வணக்கம்... எப்படி இருக்கிறீர்கள்?

கனிகா : வணக்கம் சார்... நன்றாக இருக்கிறேன்.

பிரதமர்: தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, வெற்றி பெற்றதற்கு முதலில் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

கனிகா: நன்றி சார்.

பிரதமர்: நாமக்கல் என்றதுமே, அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் தான் எனக்கு நினைவுக்கு வரும்; இனி உங்களுடனான இந்த உரையாடலும் நினைவுக்கு வரும். மீண்டும் வாழ்த்துக்கள்.

கனிகா: நன்றி சார்.

பிரதமர்: தேர்வுக்கு தயாரான அனுபவம் எப்படி இருந்தது?

கனிகா: அதிக மதிப்பெண் பெறுவதற்காக துவக்கத்திலிருந்தே கடுமையாக படித்தேன். தேர்வை நன்றாக எழுதினேன். ஆனால், இவ்வளவு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

பிரதமர்: எவ்வளவு மதிப்பெண் எதிர்பார்த்தீர்கள்?

கனிகா: 485 அல்லது 486 மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், 490 மதிப்பெண்கள் கிடைத்தன.

பிரதமர்: உங்கள் குடும்பத்தினர், ஆசிரியர் மனநிலை எப்படி இருந்தது?

கனிகா: எல்லாருமே மகிழ்ச்சி தெரிவித்தனர்; பெருமிதப்பட்டனர்.

பிரதமர்: உங்களின் விருப்ப பாடம் எது?

கனிகா : கணிதம் தான், எனக்கு விருப்ப பாடம் சார்.

பிரதமர்: உங்களின் எதிர்கால திட்டம்?

கனிகா: என்னால் முடிந்தால், ஒரு டாக்டராக விரும்புகிறேன் சார்.

பிரதமர்: உங்கள் குடும்பத்தினர் அல்லது உங்களைச் சேர்ந்த யாராவது டாக்டராக உள்ளனரா?

கனிகா: இல்லை சார்; என் தந்தை டிரைவராக பணியாற்றுகிறார். ஆனாலும், என் சகோதரி, எம்.பி.பி.எஸ்., படிக்கிறார்.

பிரதமர்: பரவாயில்லையே... முதலில் உங்கள் தந்தைக்கு வணக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அவர், உங்களையும், உங்கள் சகோதரியையும் நன்கு கவனிக்கிறார். அவர் செய்வது, மிகப்பெரிய சேவை. அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார். உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும், தந்தைக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

கனிகா: நன்றி சார்.
இவ்வாறு, பிரதமர் உரையாடினார்.

இது குறித்து மாணவி கனிகா, நாமக்கல்லில் கூறியதாவது: பிரதமர் மோடியின், 'மன் கீ பாத்' நிகழ்ச்சி குறித்து, அவரது அலுவலகத்தை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. கடந்த, 24 இரவு, 7:30 மணிக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து, எங்கள் வீட்டு மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட அதிகாரிகள், சிறிது நேரத்தில் பிரதமர் மோடி உங்களிடம் பேசுவார் என, தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த நான், அவரது குரலை கேட்க எதிர்பார்த்திருந்தேன்.

சிறிது நேரத்தில் பேசிய பிரதமர் மோடி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பிரதமரிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்