Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்போது தான் குறையும்?

ஜுலை 27, 2020 07:09

மும்பை: தடுப்பூசி இல்லை மருந்து இல்லை என்ற நிலையில் 'கொரோனா' பாதிப்பு எப்போதுதான் குறையும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 'இந்தியாவில் அடுத்த இரண்டரை மாதங்களில் வைரசின் தீவிரம் கட்டுப்படுத்தப்படும்' என மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்துள்ள ஊரடங்கு ஜூலை 31ம் தேதியுடன் முடிய உள்ளது. இது நீட்டிக்கப்படுமா என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. அதைவிட மருந்து தடுப்பூசி இல்லாத நிலையில் இந்த வைரசின் தாக்கம் எப்போதுதான் குறையுமோ என்ற ஏக்கம் உள்ளது.

இந்த நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் பாஸ்கரன் ராமன் ஒரு ஆய்வை சமர்ப்பித்துள்ளார் .இயற்பியலுக்கு நோபல் பரிசு வென்ற பேராசிரியர் மைக்கேல் லூயிட் சீனாவின் ஹூபய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஒரு ஆய்வு செய்தார். வைரஸ் பாதிப்பு எப்போது குறையும் என்பது தொடர்பாக அவர் ஒரு சூத்திரத்தை உருவாக்கினார்.

அந்த சூத்திரத்தின் அடிப்படையாக கொண்டு நம் நாட்டில் வைரஸ் பாதிப்பு எப்போது குறையும் என்பது குறித்து பாஸ்கரன் ராமன் ஆய்வு செய்துள்ளார். இம்மாதம் 13ம் தேதி வெளியிட்ட தன் ஆய்வறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது: இது மிகவும் சாதாரண கணித சூத்திரம் போலதான் உள்ளது. ஆனால் மிகவும் நுட்பமானது. இந்தாண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களிலேயே பேராசிரியர் லூயிட் இதை வெளிப்படுத்தினார்.

அந்த சூத்திரத்தின் அடிப்படையில் நம் நாடு தொடர்பாகவும் மற்ற நாடுகள் தொடர்பாகவும் கணக்கிட்டுள்ளோம். மக்கள் தொகையின் அடிப்படையில் இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் உயிர் பலியை உள்ளீடு செய்து இந்த சூத்திரத்தின் அடிப்படையில் எப்போது வைரஸ் பாதிப்பு குறையும் என்று கணக்கிட்டுள்ளோம். அதனால் ஒரு நகரம் மாநிலம் என எந்த அளவுக்கும் இந்தக் கணக்கீட்டை செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து வைரஸ் முற்றிலுமாக மறைந்து விடும் என்பதை கூற முடியாது.

அதே நேரத்தில் எப்போது பலி எண்ணிக்கை மிகவும் குறையும் என்பதே இந்தக் கணக்கீட்டின் அடிப்படை. இந்தாண்டு மார்ச் 14ல் வெளியான லூயிட் கணக்கீட்டின்படி ஹூபய் மாகாணத்தில் பாதிப்பு துவங்கியதில் இருந்து 90 - 100 நாட்களில் குறையும் என கணிக்கப்பட்டது. அது நடந்துள்ளது. அதே முறையில் நாங்கள் கணக்கிட்டதன்படி ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் ஸ்வீடன் இத்தாலி ஆகியவற்றில் பாதிப்புகள் குறைந்துவிட்டன. பிரேசிலில் அடுத்த இரண்டு வாரங்களில் குறைந்து விடும்.

இந்த முறையில் கணக்கிட்டதில் நம் நாடு முழுதும் அடுத்த இரண்டரை மாதங்களில் பாதிப்பு குறையும் என்பது தெரியவந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுத்த இரண்டு வாரங்களில் குறைந்துவிடும். டில்லியில் இரண்டரை வாரங்களில் பாதிப்பு குறையும். சென்னையைப் பொருத்தவரை ஒரு மாதத்தில் கொரோனா பலி குறைந்துவிடும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனா பலிகுறைவதற்கு மேலும் ஆறு மாதங்களாகும். மாநிலத்தில் தற்போதுதான் பாதிப்பின் துவக்கத்தில் உள்ளோம்.

கேரளாவில் இது வரையிலான பாதிப்பு மற்றும் பலி என்பது மிகவும் குறைவு. அங்கு வைரஸ் பரவல் சரியான திட்டமிடலால் தடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் தற்போதுதான் பாதிப்பின் தீவிரம் துவக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்