Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டசபை தேர்தலில் போட்டியிட போவது இல்லை: தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா பிடிவாதம்

ஜுலை 27, 2020 08:17

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக நீடிக்கும் வரை தாம் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஒரு ஆங்கில நாளிதழில் உமர் அப்துல்லா எழுதிய கட்டுரையில் கூறி இருப்பதாவது:
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி. சுமார் ஓராண்டாகிவிட்டது. 70 ஆண்டுகாலத்துக்கும் மேலான ஒரு வரலாற்றை லோக்சபா, ராஜ்யசபாவில் ஒரு நிமிடத்துக்கும் குறைவான தருணத்தில் மாற்றி அமைத்துவிட்டீர்கள். அன்றய தினம் நானும் வீட்டு காவலில் வைக்கப்பட்டேன். பின்னர் அரசு விருந்தினர் மாளிகை காவலுக்கு மாற்றப்பட்டேன்.

மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கட்ட போதே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்படும் என வதந்திகள் கிளம்பின. இந்த சூழ்நிலையில்தான் திடீரென ஶ்ரீநகருக்கு மத்திய பாதுகாப்பு படைகள் அனுப்பி வைக்கப்பட்டு இந்த மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர். ஆனால், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்றே அரசு தரப்பில் மீண்டும், மீண்டும் கூறப்பட்டது.

அந்த ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர்தான் பிரதமர் மோடியை எங்களது தேசிய மாநாட்டு கட்சி குழுவினர் சந்தித்தும் பேசி இருந்தனர். ஆனால் அடுத்த 72 மணிநேரத்தில் எல்லாமும் மாறிவிட்டன. இந்தியாவுடன் இணைந்த போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்கிற உறுதிதான் மிக முக்கியமானதாக இருந்தது. ஆனால் அதை நீக்கிவிட்டனர்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அதன் நீண்டகால தேர்தல் வாக்குறுதியே அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்வது என்பதுதான். தேசத்தின் 70 ஆண்டுகால வரலாற்றில் எத்தனையோ யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரில்தான் நிகழ்ந்தது. புத்தமதத்தினர் நீண்ட காலமாக லடாக் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள் எனில் ஜம்மு தனி மாநில கோரிக்கை நீண்டகாலமாக இருக்கிறதே. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறதே.

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்க 370வது பிரிவு ரத்து உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை எதிர்த்து எங்களது தேசிய மாநாட்டுக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் மாண்டு போயுள்ளனர். ஆனால் மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் வன்முறை அதிகரித்திருப்பதாக சொன்னதே? ஏன்?.

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவால்தான் ஜம்மு காஷ்மீர் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பதாகவும் சொன்னார்கள். இந்த தேசத்தின் வறுமை கோட்டு அளவு மிகவும் குறைவாக இருக்கும் மாநிலம் ஜம்மு காஷ்மீர். இங்கே தீவிரவாதம் தலை எடுப்பதற்கு முன்னர் தொழில்துறை வளம் உள்ளிட்ட அத்தனையும்தானே இருந்தது. சுற்றுலாத்துறை உயரிய வளர்ச்சியை எட்டவில்லையா?

ஒருகட்டத்தில் 370-வது பிரிவு சிறப்பு தகுதி என்பதே தற்காலிகமானதுதான் என்றும் கூட கூறினார்கள். 1947,48-ம் ஆண்டுகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் என்னவெல்லாம் கூறப்பட்டது? என்னைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை நான் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இன்னமும் எங்களது மூத்த தலைவர்கள் தடுப்பு காவலில்தான் உள்ளனர்.

மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை உள்வாங்கி அடுத்த கட்டமாக முன்னெடுத்துச் செல்வதே தேசிய மாநாட்டு கட்சியின் இப்போதைய பணி. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு உமர் அப்துல்லா எழுதியுள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்