Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்க கடத்தல் வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம் என்.ஐ.ஏ., தீவிர விசாரணை

ஜுலை 28, 2020 06:29

கொச்சி : தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மேற்காசிய நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக துாதரகத்தில் பணியாற்றி வந்த சரித் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் முதல்வரின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலராக இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவர் இந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

தங்கம் கடத்தல் தொடர்பாக சிவசங்கரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். அதுபோல் சுங்கத் துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. பல மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் தங்கம் கடத்தல் தொடர்பாக சிவசங்கரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த கடத்தல் கும்பலுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது உட்பட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்