Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இயங்கி வரும் ஆதித்யாவுக்கு குளோபல் விருது

ஜுலை 30, 2020 07:00

கொச்சி: குறைந்த விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் கேரள மக்களுக்காக இயங்கி வரும் மின்சார படகான ஆதித்யாவிற்கு, உலகின் மிகச்சிறந்த மின்சார படகாக தேர்வு செய்யப்பட்டு குஸ்டாவ் ட்ரூவ் குளோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

1839 ம் ஆண்டு ஜன.,2ம் தேதி பிறந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரான குஸ்டாவ் ட்ரூவ் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவிலும், போக்குவரத்து மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார். இதன்காரணமாக 75க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் அவரது பெயருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மின்சார பொறியியல், சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் கட்டண பயணிகளின் சேவைக்காக வடிவமைக்கப்பட்ட படகுகள் என்ற பிரிவில் ஆதித்யாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்காக ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் சிங்கப்பூரில் இருந்து 50க்கும் மேற்பட்ட படகுகள் போட்டியில் கலந்து கொண்டன. போட்டியில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில் ஆதித்யாவிற்கு குஸ்டாவ் ட்ரூவ் குளோபல் விருது கிடைத்துள்ளது. நாட்டின் முதல் சூரிய படகும் என்ற பெருமையையும் கொண்டுள்ளது.

கொச்சியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நாவால்ட் சோலார் அண்டு எலக்ட்ரிக் போட் நிறுவனத்தால் சுமார் ரூ. 2 கோடி செலவில் ஆதித்யா சோலார் படகு 75 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2017 ம் ஆண்டு முதல் மாநில அரசின் நீர் போக்குவரத்து துறையால் (கே.எஸ்.டபிள்யூ.டி.டி) கோட்டயம் - ஆலப்புழா மாவட்டங்களை இணைக்கும் வகையில் வைக்கம்-தவணக்கடவ் பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது.

மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு டீசல் இன்ஜினால் ரூ.8 ஆயிரம் செலவாகும் நிலையில் சோலார் படகிற்கு ரூ.180 மட்டுமே செலவாகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த படகின் மூலம் ஒரு லட்சம் லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டுள்ளது; 280 டன் கார்பன் டை ஆக்ஸைடு குறைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் ரூ.25 லட்சம் லாபம் ஈட்டத்தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படகு தயாரிப்பான நாவால்டியின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தித் தண்டசேரி கூறியதாவது: ஆலப்புழா சுற்றுலா மையத்தில் அடுத்த மாதம் 100 பயணிகள் பயணிக்கும் இரட்டை அடுக்கு (டபுள் டெக்கர்) கொண்ட படகுகள் இயக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டுக்குள் மேலும் ஐந்து படகுகள் இயக்கப்படும் என கூறினார்.

தலைப்புச்செய்திகள்