Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏழு பேர் விடுதலைக்கு கவர்னர் முடிவெடுக்காதது ஏன்?: ஐகோர்ட் கேள்வி

ஜுலை 30, 2020 07:04

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள சதியை விசாரிக்கும், பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் முடிவுக்காக, தமிழக கவர்னர் காத்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழு பேர் விடுதலை குறித்த தீர்மானத்தின் மீது, எந்த முடிவும் எடுக்காதது குறித்து, நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு, அரசு தரப்பில் இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இவர்களில், பேரறிவாளனும் ஒருவர். சென்னை, புழல் சிறையில் உள்ளார்.பேரறிவாளன் உடல் நிலையை கருதி, 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் அற்புதம்மாள், மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ''பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான, தமிழக அரசின் தீர்மானம், இரண்டு ஆண்டுகளுக்கு மேல், கவர்னரிடம் நிலுவையில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், பரோல் வழங்க இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதில்லை,'' என்றார்.இதையடுத்து, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பதவி வகிப்பவர்கள் மீதான நம்பிக்கை அடிப்படையில், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில், நேரம் நிர்ணயிக்கப்படவில்லை என்று, நீதிபதிகள் கூறினர்.

மேலும், ஏழு பேர் விடுதலை குறித்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, எந்த முடிவும் எடுக்காதது குறித்தும், கேள்வி எழுப்பி இருந்தார்.இவ்வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ''ராஜிவ் கொலை சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதி குறித்து விசாரிக்க, பல்நோக்கு கண்காணிப்பு குழுவை, ஜெயின் கமிஷன் அமைத்துள்ளது. இக்குழு விசாரணையின் முடிவுக்காக, கவர்னர் காத்திருக்கிறார். அதனால் தான், ஏழு பேர் விடுதலை குறித்த பரிந்துரையின் மீது முடிவெடுக்கவில்லை,'' என்றார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ''சிறையில், 29 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் பேரறிவாளனுக்கு, உடல் பாதிப்புகள் இருப்பதால், பரோலில் விடுவிக்க வேண்டும்,'' என்றார்.அதற்கு, தலைமை வழக்கறிஞர் நடராஜன், ''அவருக்கு பரோல் வழங்கி, ஓராண்டு கூட முடியவில்லை. மருத்துவ சான்றிதழும் தாக்கல் செய்யவில்லை,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள், 'சிறையில் இருப்பவருக்கான மருத்துவ ஆவணங்களை, அதிகாரிகள் ஏன் தாக்கல் செய்யக் கூடாது. இந்த வயதில், ஆவணங்களுக்காக அவரது தாயார் அலைவாரா...'மார்ச் மாதம் அளித்த கோரிக்கையை, இதுவரை ஏன் பரிசீலிக்கவில்லை. பரோல் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்காததற்காக, அபராதம் விதிக்கலாமா' என, கூறினர்.அதைத்தொடர்ந்து, பதில் மனு தாக்கல் செய்ய, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை அடுத்த வாரத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதற்குள், அரசு தரப்பில் பதில் அளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்