Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொல்லிமலைக்கு ரூ.2½ கோடியில் 3-வது மாற்றுப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

ஜுலை 30, 2020 08:15

நாமக்கல்: கொல்லிமலைக்கு ரூ.2½ கோடியில் 3-வது மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சேந்தமங்கலத்தில் இருந்து காரவள்ளி வழியாக முதன்மை சாலை உள்ளது. இந்த வழியாக பஸ் லாரி உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ராசிபுரம் பகுதியில் இருந்து கொல்லிமலைக்கு செல்ல முள்ளுக்குறிச்சி வழியாக சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் கொல்லிமலை குண்டுனிநாடு பகுதியில் இருந்து சேலம் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு காரவள்ளி சாலை வழியாகவோ அல்லது முள்ளுக்குறிச்சி சாலை வழியாக நெடுந்தூரம் சுற்றிதான் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. ஆனால் குண்டுனிநாடு ஊராட்சி் வேலிக்காடு பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் தம்மம்பட்டி பகுதியானது 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதற்கு இடைப்பட்ட பகுதியானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் சாலை அமைக்க முடியாத சூழல் இருந்து வந்தது. 
தற்போது இந்த சாலை அமைக்கும் பணிக்கு மத்திய அரசின் வனத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் அடிப்படையில் கொல்லிமலைக்கு செல்ல 3-வது மாற்றுப்பாதையாக குண்டுனிநாடு ஊராட்சியில் வேலிக்காடு முதல் சேரடி வரை ரூ.2½ கோடி மதிப்பீட்டில் 1.60 கி.மீ. நீளத்திற்கு புதிதாக தார்சாலை அமைக்கும் பணிக்கு வேலிக்காடு பகுதியில் நேற்று பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி வனஅலுவலர் சக்திவேல் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தி உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கனகராஜ் சேந்தமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி உதவி செயற்பொறியாளர் ஜவஹர் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சிவபிரகாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்