Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டும் நாடுகளை மதிப்பதே எங்கள் கொள்கை: பிரதமர் மோடி

ஜுலை 31, 2020 07:42

புதுடெல்லி :''வளர்ச்சிக்கான நல்லுறவு என்ற பெயரில், ஒரு நாடு, மற்றொரு நாட்டை சார்ந்து இருக்க நிர்பந்திக்கப்படுவதை தான், வரலாறு நமக்கு உணர்த்துகிறது.''ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, நம்முடன் நல்லுறவு பாராட்டும் நாடுகளை மதிப்பதே, அடிப்படை கொள்கையாக பின்பற்றப்படுகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

'வீடியோ கான்பரன்ஸ்'கிழக்கு ஆப்பிரிக்க நாடான, மொரீஷியசில், புதிதாக கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்தனர். அந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில், வளர்ச்சிக்கான முன்னெடுப்பு என்பது, மனிதர்களை அடிப்படையாக கொண்டது. தங்கள் வளர்ச்சிக்காக, எங்களுடன் நட்புறவு பாராட்டுபவர்களை, நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் ஸ்திரமான வளர்ச்சி மற்றும் வளமான எதிர்காலத்தில், நாங்கள் அக்கறை செலுத்துகிறோம்.

வளர்ச்சிக்கான நல்லுறவு என்ற பெயரில், ஒரு நாடு, மற்றொரு நாட்டை சார்ந்து இருக்க நிர்பந்திக்கப்படுவதை தான், வரலாறு நமக்கு உணர்த்துகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, எங்களுடன் நல்லுறவு பாராட்டும் நாடுகளை மதிப்பதே, அடிப்படை கொள்கையாக பின்பற்றப்படுகிறது. பாதுகாப்புநாங்கள் படித்த, வளர்ச்சிக்கான பாடங்களை பகிர்வதே, நட்பு நாடுகளுக்கு நாங்கள் தரும் ஊக்கமாக இருக்கும் என, நம்புகிறோம். அதனால் தான், எங்கள் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு என்பது, நிபந்தனை அற்றதாக உள்ளது.

இந்திய கடல் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து நாடுகளும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில், இந்தியா தெளிவாக உள்ளது.நட்புறவு நாடுகளுக்கு, நிகழ் காலத்தில் உதவுவது மட்டுமில்லாமல், சிறப்பான எதிர்காலம் அமையவும் உதவுகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

தெற்காசிய நாடான, மாலத்தீவுகளில், கடந்த கால ஆட்சியில் இருந்தவர்களுக்கு, சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.இந்த கடனை அடைக்க, தற்போதைய மாலத்தீவு அரசுக்கு, இந்தியா உதவி வருகிறது.அதே போல, சீனாவிடம் வாங்கிய பெரும் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல், இலங்கை அரசு தவித்து வருகிறது. இதற்காக, இலங்கையின், அம்பன்தோட்டா துறைமுகத்தை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு, சீனாவிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டது.இவற்றை மறைமுகமாக சுட்டிக்காட்டும் நோக்கில், பிரதமர் மோடியின் பேச்சு அமைந்திருந்ததாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்