Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பக்ரீத் பண்டிகைக்கு பொது இடங்களில் விலங்குகளை பலியிட கூடாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஜுலை 31, 2020 08:51

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொதுவெளியில் ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை பலியிடுவதற்கும் பொது இடங்களில் இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும். 

ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் தமிழகத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. அப்போது உரிய விதிகள் பின்பற்றப்படாமல் விலங்குகள் வதை செய்யப்படுகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ‘ பொது இடங்களில் விலங்குகள் கொல்வதற்கு தடை விதித்து கடந்த ஜூன் 20-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும் மராட்டிய மாநில அரசு பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படியும் பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்று வாதிடப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது்-
ஒரு நாட்டின் பெருமை மற்றும் நன்னடத்தை என்பது அந்த நாட்டில் விலங்குகளை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாக தேச பிதா காந்தியடிகள் கூறியுள்ளார். தற்போது பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டது. பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இந்த மனுவுக்கு 3 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். விசாரணையை ஆகஸ்டு 20-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்