Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாக்டர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

ஆகஸ்டு 01, 2020 07:24


புதுடெல்லி: 'கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியம் வழங்க, மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது

'கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும், டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, சரிவர ஊதியம் வழங்கப்படுவதில்லை' என, டில்லியை சேர்ந்த டாக்டர் ஆருஷி ஜெயின், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.விசாரணைஅந்த மனுவை, ஜூன், 17ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, முறைப்படி ஊதியம் வழங்குவதுடன், தனிமைப்படுத்தும் வசதிகளை செய்து தரும்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என, உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை, மாநில அரசுகள் முறையாக பின்பற்றவில்லை. சுகாதார பணியாளர்களுக்கு, தற்போதும் முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை' என, கூறினார்.இதற்கிடையே, 'யுனைடெட் ரெசிடென்ட் டாக்டர்கள் அசோசியேஷன்' சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின், 14 நாள், கட்டாய தனிமை காலத்தை, விடுப்பாக கருதி, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதாக, கூறப்பட்டு இருந்தது.இதையும் கவனத்தில் எடுத்த நீதிபதிகள், அது குறித்து, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தாவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:டாக்டர்களின் தனிமைப்படுத்தும் காலத்தை விடுமுறையாக கருத முடியாது. இதில் உரிய கவனம் செலுத்தப்படும். டாக்டர்களுக்கு ஊதியம் வழங்குவதில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை, பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன. மஹாராஷ்டிரா, பஞ்சாப், திரிபுரா, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் மட்டும், டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்கவில்லை. இப்பிரச்னையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'மத்திய அரசின் உத்தரவுகளை, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதை, நீங்கள் உறுதி செய்ய வேண்டும். 'கொரோனா பரவல் நேரத்தில், மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றாதவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்' எனக் கூறினர்.அத்துடன், டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் ஊதியத்தை, மாநில அரசுகள், உரிய நேரத்தில் வழங்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, வரும், 10க்கு தள்ளிவைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்