Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டின், டாப் 20 அந்தஸ்தை இழந்தது கோவை விமான நிலையம்

ஆகஸ்டு 02, 2020 06:37

கோவை: கடந்த நிதியாண்டில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், கோவை விமான நிலையம், 'டாப் 20' விமான நிலையங்களில் ஒன்று என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.கடந்த நிதியாண்டில், பயணிகளைக் கையாண்ட எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் 'டாப் 20' விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி சர்வதேச விமான நிலையம், ஏழு கோடி பயணிகளைக் கையாண்டு நாட்டின் முதன்மையான விமான நிலையம் என்ற பெயரைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.சென்னை 2.25 கோடி பயணிகளுடன் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, டாப் 20க்குள் இருந்த கோவை விமான நிலையம், 2019-2020 நிதியாண்டில் 22வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.கடந்த 2016ம் ஆண்டில், இந்தியாவின் 'பிஸி' யான விமான நிலையங்களின் பட்டியலில், 20 வது இடத்தில் இருந்த கோவை சர்வதேச விமான நிலையம், அடுத்தடுத்த ஆண்டுகளில் 19 மற்றும் 18 ஆகிய இடங்களில் நீடித்தது. தற்போது டாப் 20 விமான நிலையங்களில் ஒன்று என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.

கடந்த 2015-2016ம் ஆண்டில் 17 லட்சம் பயணிகளைக் கையாண்டது கோவை விமான நிலையம். அடுத்தடுத்த ஆண்டுகளில் 21 லட்சம், 29 லட்சம் என்று பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அடுத்த ஆண்டில் 30 லட்சம் என்று உயர்ந்தது. கடந்த ஆண்டில் இது 28 லட்சமாகக் குறைந்துள்ளது.கோவையைப் போன்றே ஒற்றை ஓடுதளம் கொண்ட, 180 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் மட்டுமே இறங்கக்கூடிய கட்டமைப்பைக் கொண்ட மற்ற நகரங்களின் விமான நிலையங்கள், இவற்றை விட அதிகளவு பயணிகள் வருகின்றனர்.
கவுகாத்தி மற்றும் லக்னோ-தலா 55 லட்சம், ஜெய்ப்பூர்-50 லட்சம், பாட்னா-45 லட்சம், திருவனந்தபுரம், புவனேஸ்வர்-தலா 40 லட்சம், கோழிக்கோடு-33 லட்சம், சிலிகுரி-32 லட்சம், நாக்பூர், வாரணாசி-தலா 30 லட்சம், இந்துார்-29 லட்சம் என மற்ற விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.கோவை விமான நிலைய விரிவாக்கம் தாமதமாவதால் சர்வதேச விமானங்கள் வருவது குறைவாகவுள்ளது. முக்கிய நகரங்களுக்கான இணைப்பு விமானங்கள் குறைவாகவே இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் டில்லி, மும்பை, புனே, மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். புலம் பெயர் தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கும் விமானங்களை இயக்குவது அவசியம்.துபாய், சிங்கப்பூர், மஸ்கட் மற்றும் ஷார்ஜா ஆகிய நாடுகளிலிருந்து கோவைக்கு, 'வந்தே பாரத் மிஷன்' விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
இங்கிருந்து நான்கு மணி நேர பயணத்தில் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பதால், கூடுதல் விமானங்களை இயக்க விமான நிலைய ஆணையம் முயற்சி எடுக்க வேண்டும்.தற்போதுள்ள கோவை விமான நிலையக் கட்டமைப்பில், ஆண்டுக்கு 35 லட்சம் பயணிகளை அதிகபட்சமாகக் கையாளமுடியும். இருக்கும் இடத்திலேயே கூடுதல் முனையத்தை உருவாக்கினால், ஆண்டுக்கு 75 லட்சம் பயணிகளைக் கையாள முடியும். விமான நிலைய விரிவாக்கத்துடன், தேவையான கட்டமைப்பு வசதிகளையும் விரைவாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைப்புச்செய்திகள்