Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடைகிறது

ஆகஸ்டு 03, 2020 07:12

சென்னை; வங்க கடலில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, அம்மையம் வெளியிட்ட அறிவிப்பு:வங்க கடலின் வடக்கு பகுதியில், புதிய காற்ற ழுத்த தாழ்வுப்பகுதி, நாளை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவ மழை மேலும் தீவிரமடையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

அதனால், அடுத்த, 48 மணி நேரத்தில், திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், கடலுார், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை,சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யலாம்.

மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதி, வடக்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் வீசலாம்.தென் தமிழக கடலோர பகுதிகளில், கடல் அலை, 3.9 மீட்டர் வரை எழும்பும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்படுகின்றனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்