Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவின் அடுத்த அலையைத் தடுக்க ஒரே வழி முகக்கவசம் மட்டுமே: ராதாகிருஷ்ணன்

ஆகஸ்டு 05, 2020 06:59

திருச்சி: தமிழகத்தில் கொரோனா தொற்றின் அடுத்த அலையைத் தடுக்க ஒரே வழி முகக்கவசம் மட்டுமே. எனவே மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றார்  சுகாதாரத் துறைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆந்திரம் கா்நாடகம் மகாராஷ்டிரம் உள்ளிட்ட தொற்றுப் பாதித்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் சிறந்த தரத்திலான பரிசோதனையும் சிகிச்சை முறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. கூட்டு மருந்துச் சிகிச்சை உள்ளிட்ட 12 வகையான சிகிச்சை முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பாதிப்பின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

3 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சையளிக்கப்படுகிறது. திருச்சி உள்ளிட்ட பிற இடங்களிலும் இந்த சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நோய்த் தொற்று இருப்பதை முன்னரே கண்டறிந்து சிகிச்சையளித்தால்தான் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். குறிப்பாக நுரையீரல் பிரச்னை வருவதற்கு முன்பே சிகிச்சைக்கு வந்தால் எளிதில் குணப்படுத்தலாம். 70 சதவீத நுரையீரல் பிரச்னையுடன் வந்தவா்களும் குணமடைந்துள்ளனா். இறப்பு விகிதத்தை மறைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது. ஐசிஎம்ஆா் விதிமுறைகளைப் பின்பற்றியே இறப்பை அறிவிக்க வேண்டியுள்ளது.

125 பரிசோதனை மையங்களில் 75 சதவீத அரசு மருத்துவமனை 25 சதவீத தனியார் மருத்துவமனை என்ற வகையில் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இனி வரும் நாள்களில் தவறுக்கு இடம் இல்லாத வகையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
பரிசோதனை எண்ணிக்கைகளை தொடா்ந்து அதிகப்படுத்தி வருகிறோம். அதிகம் பாதித்த பகுதிகளில் 10 மடங்கு கூடுதல் பரிசோதனை நடத்தப்பட்டு தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த அலை வரும்போது பாதிப்பு அதிகரிக்குமா குறையுமா என அச்சப்படத் தேவையில்லை. அடுத்த அலையைத் தடுக்க ஒரே வழி முகக்கவசம் அணிவது மட்டுமே. சுகாதாரத்துறையின் நடவடிக்கைக்கு மக்கள் தீவிரமாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு உள்ளிட்ட இதர நோய்களைக் கட்டுப்படுத்தவும் சுகாதாரத்துறையின் அனைத்து பிரிவுகள் உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பேட்டியின்போது மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதன்மையா் வனிதா கண்காணிப்பாளா் ஏகநாதன் ஆகியோ ர் உடனிருந்தனா்.

 
பனியன் துணி பயன் தராது

பனியன் துணியில் அணியப்படும் முகக் கவசம் பயன்தராது. ஏனெனில் காற்று உள் புகாத வகையிலும் வெளியேறாத வகையிலும் இருந்தால்தான் வைரஸ் பரவ வாய்ப்பு இருக்காது. ஆனால் பனியன் துணியில் அணியப்படும் முகக்கவசத்துக்குள் காற்று புகும் வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில்கொண்டே தமிழக அரசு அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா 2 தரமான முகக்கவசம் வழங்க உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் 60 சதவீதம் போ்தான் முகக் கவசம் அணிகின்றனா். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.
 

தலைப்புச்செய்திகள்