Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் திறப்பு

ஆகஸ்டு 05, 2020 07:24

புதுடெல்லி : கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று(ஆக.,5) முதல் இயங்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், உடற் பயிற்சி கூடங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், உடற்பயிற்சி கூடங்களை திறக்க தடை நீடிக்கிறது. இந்நிலையில், டில்லி தலைநகர் பிராந்தியத்தில், 40 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வரும், அசீமா ராவ் கூறியதாவது: ஹரியானா, காசியாபாத் நகரங்களில், 19 உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க உள்ளோம்.

அரசு உத்தரவுப்படி, உடற்பயிற்சி கூடத்தின் வாசலில், 'சானிடைசர்' எனப்படும் கிருமி நாசினி வைக்கப்படும். அவற்றை பயன்படுத்தி, கைகளை துாய்மைப்படுத்திக் கொண்ட பின், வெப்பமானி சோதனை நடத்தப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அறியும் 'ஆக்சிமீட்டர்' கருவிகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருவியில், ஒருவரின் சுவாச அளவு, 95 சதவீதத்திற்கு குறைவாக இருப்பது தெரியவந்தால், அவருக்கு அனுமதி மறுக்கப்படும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, கிருமி நாசினி தெளிக்கப்படும். உடற்பயிற்சிக் கூடங்கள் ஒவ்வொன்றும், 6,000 சதுர அடி பரப்பளவில் உள்ளன. அதனால், சமூக இடைவெளியை கடைபிடிக்க, பயிற்சி இயந்திரங்கள், கருவிகள் ஆகியவை, ஆறடிக்கு ஒன்று என்ற வீதத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக, ஒருவேளையில், 60 பேர் உடற்பயிற்சிக்கு வருவர். தற்போது, 25 பேர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். பணியாளர் எண்ணிக்கையை, 50 சதவீதமாக குறைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

குருகிராமைச் சேர்ந்த, சேத்னா பெனிவால், ''வழக்கமாக வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வேன். ஊரடங்கின் போது, வீட்டிலேயே, 'வொர்க் அவுட்' செய்யத துவங்கினேன். தற்போது, மீண்டும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டாலும், ஒரே கருவியை பலர் கையாள்வர் என்பதால், வீட்டிலேயே பயிற்சியை தொடர உள்ளேன்,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்