Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆகஸ்டு 05, 2020 07:52

டேராடூன் : 'கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும், பி.பி.இ., எனப்படும், தனிநபர் பாதுகாப்பு உடையில் இருந்து, எரிபொருளை உருவாக்கலாம்' என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், தனிநபர் பாதுகாப்பு உடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நெய்யப்படாத பாலிபுரொபிலின் என்ற பிளாஸ்டிக் பொருள் மூலம் தயாரிக்கப்படுகிறது. தற்போது, இதற்கான தேவை அதிகரித்து உள்ளது.அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட இந்த உடையை அழிப்பது தொடர்பாக எந்த விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை. இந்த உடைகள் மூலம், கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில், அவை தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 'இந்த கவச உடைகள் மூலம், பெட்ரோலுக்கு நிகரான எரிபொருளை உருவாக்க முடியும்' என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு கட்டுரை, சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட முழு உடல் கவச உடைகளை அழிப்பது தொடர்பாக எந்த முயற்சியும், பெரிய அளவில் நடக்கவில்லை. இந்த கவச உடைகளை, 300 - 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், ஆக்சிஜன் இல்லாமல், 'பைராலிசிஸ்' என்ற முறையில் ரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தலாம்.

அவ்வாறு செய்யும்போது, அதில் இருந்து சக்தி வாய்ந்த எரிபொருள் கிடைக்கும். பூமியில் கிடைக்கும் பெட்ரோலியத்தில் உள்ள அம்சங்கள் பல, இந்த எரிபொருளிலும் உள்ளது.இதன்வாயிலாக, பயன்படுத்தப்பட்ட கவச உடைகளை குப்பையில் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் தவிர்க்க முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்