Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

ஆகஸ்டு 05, 2020 07:58

புதுடெல்லி: அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(ஆக., 5) நடந்தது . 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

உ.பி.,யின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு, ‛ ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது.

இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை நடந்தது. இதனால், அயோத்தி மாவட்டம் முழுதும், விழாக்கோலம் பூண்டது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு பூமி பூஜைக்கான சடங்குகள் அயோத்தியில் நேற்று முன்தினம்(ஆக., 3) துவங்கியது. வாரணாசியில் இருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்று காலை 8:00 மணி முதல் அடிக்கல் நாட்டுவிழாவிற்கன பூஜைகள் துவங்கின.

விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டில்லியிலிருந்து இன்று காலை 9: 30 மணிக்கு சிறப்பு விமானத்தில் லக்னோ சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றார். அவரை, உ.பி., முதல்வர் யோகி. வரவேற்றார்.

பின்னர் கார் மூலம் ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்ற பிரதமர் சிறப்பு வழிபாடு செய்தார். கோவிலுக்கு வந்த அவரை, நிர்வாகிகள் வரவேற்றனர். அவருடன் யோகியும் இருந்தார்.

இதன் பின்னர், கடவுள் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று பூஜை செய்து வழிபாடு நடத்தினார். மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க, பூமி பூஜைகள் சடங்குகள் நடந்தன.

அடுத்து, ராம ஜன்மபூமிக்கு சென்றார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார். பூமி பூஜைக்காக 2 ஆயிரம் கோயில்களில் இருந்து புனித மண் மற்றும் 100 நதிகளில் இருந்து புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

உ.பி., முதல்வர் யோகி, கவர்னர் ஆனந்தி பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் யோகா குரு ராம்தேவ், சுவாமி அவ்தேஷானந்த் கிரி, சிதாநாந்த் மஹாராஜ் உள்ளிட்ட 175 பேர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்