Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரியில் தொடர் கனமழை: நிவாரண முகாம்களில் பொது மக்கள்

ஆகஸ்டு 06, 2020 06:28

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மூன்றாம் நாளாக கனமழை பெய்வதால், இன்றும் (ஆக.,06) ‛ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் மரம் விழுந்து இருவர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அவலாஞ்சியில் 581 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, எமரால்ட், குந்தா பாலம், கன்னேரி மந்தனை, அண்ணா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் 800 பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் பல இடங்களில் மரம் விழுந்து, மாவட்டம் முழுவதும் மின்தடை தொடர்கிறது. கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிங்கார உயர் அழுத்த மின்பாதை டவர் மீது மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டதால், கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்கான மின்வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி கூடலூர் சாலையில் ஆபத்தான மரங்களை வெட்டும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 530 பேர் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்கள் முகாம்களுக்கு வர, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ஊட்டியில் ஏற்பட்ட மின் தடையால் நகராட்சி பகுதி, வெலிங்டன் ராணுவ மையத்திற்கு குடிநீர் வினியோகிப்பதில் மூன்றாம் நாளாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் மழைநீரை குடிநீராக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஊட்டியில் மரம் விழுந்து இரு ஆண்கள் பலியாகி உள்ளனர். திட்டுக்கள் பகுதியில் இரு தோடர் எருமைகள் பலியாகின. பேரிடர் மற்றும் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார், 20 தீயணைப்பு குழுவினர், 40 சிறப்பு பேரிடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.,06) காலை நிலவரப்படி, அதிகபட்சமாக அவலாஞ்சியில் 581 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, கூடலூர் - 335 மி.மீ., மேல்பவானி - 319 மி.மீ., மேல் கூடலூர் - 305 மி.மீ., நடுவட்டம் - 226 மி.மீ., தேவாலா - 220 மி.மீ., கிளன்மோர்கன் - 212 மி.மீ., எமரால்டு - 175 மி.மீ., மழை பெய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்