Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

ஆகஸ்டு 06, 2020 07:51

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் தற்போது வரை நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 57 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் பிமுகர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மற்றும் மகன்கள் இருவர், மனைவி உள்ளிட்ட 9 பேருக்கு உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அமைச்சர், அவரது மகன் ஆகிய இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது இளைய மகன் விக்னேஷ் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்