Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க.வில் எழுந்துள்ள திடீர் சலசலப்பு: மாவட்டங்களில் ஸ்டாலின் நேரடி ஆய்வு?

ஆகஸ்டு 06, 2020 08:05

சென்னை: தி.மு.க.வில் உட்கட்சிப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட வாரியாக நேரடி ஆய்வு நடத்தி நிலவரத்தை அறிந்துகொள்ள மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால் கடந்த 4 மாதங்களாக வீட்டில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் நிர்வாகிகளை சந்தித்து பேசி வரும் மு.க.ஸ்டாலின், இப்போது நேரடி விசிட் அடிக்கவுள்ளார். உட்கட்சிப் பிரச்சனைகள் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக சென்று அங்கு சமூக இடைவெளியுடன் ஸ்டாலின் நிர்வாகிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

தி.மு.க.வில் உள்ளூர் அரசியல் காரணமாக உட்கட்சிப் பிரச்சனைகள் அண்மைக்காலமாக தலைதூக்கி வருகின்றன. கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை பல மாவட்டங்களில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பஞ்சாயத்து செய்து பார்த்தும் தீர்வு கிடைத்தபாடில்லை. இதனால் பொறுத்தது போதும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினே நேரடியாக களத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

காணொலிக் காட்சி மூலம் நிர்வாகிகளை சந்திப்பதை விட நேரடியாக ஒரு விசிட் அடிப்பது நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஸ்டாலினின் நம்பிக்கை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதை ரசிக்காத ஸ்டாலின், பிரச்சனைகளை ஆரப்போடுவதை விட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் எழுந்துள்ள பிரச்சனைகளை பற்றி ஆராய்ந்து பார்த்தால், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த வரிசையில் உள்ள 2-ம் கட்ட நிர்வாகிகளுக்கும் இடையே தான் முட்டல் மோதல் நடந்துவருவதை அறிய முடிகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, கரூர், சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்கள் ஸ்டாலினுக்கு தலைவலியை கொடுக்கக்கூடிய டாப் 5 மாவட்டங்களாகும்.

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் அவருடைய சுற்றுப்பயணத்திற்கு எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை. அமைச்சருக்குரிய அந்தஸ்தும், சலுகையும் எதிர்க்கட்சித் தலைவருக்கு உண்டு. இதனால் விரைவில் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்