Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரியில் பலத்த காற்றுடன் தொடரும் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது

ஆகஸ்டு 07, 2020 07:07

ஊட்டி: நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கூடலூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் வசித்த 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை அவலாஞ்சியில் 346 மி.மீ., கூடலூரில் 349 மி.மீ., தேவாலா 360 மி.மீ., மேல்கூடலூர் 330 மி.மீ., மழை பெய்துள்ளது.

நீலகிரியில், கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மாவட்ட முழுவதும், 50க்கு மேற்பட்ட இடங்களில், 400க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. குறிப்பாக, ஊட்டி - பைக்காரா சாலை, மஞ்சூர் - கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர் பவனி, எமரால்டு , அண்ணா நகர் சாலைகளில் நேற்றிரவு வீசிய பலத்த காற்றுக்கு அடுத்தடுத்து மரங்கள் விழுந்து வருகிறது. சீரமைப்பு பணியின் போதே அருகருகே மரங்கள் சாய்வதால் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், மேற்கண்ட சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பொக்லைன் உதவியுடன் உடனுக்குடன் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நாளை 8ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பலத்த காற்றும் வீசுவதால் இலை பறிக்க செல்லும் தொழிலாளர் பணிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகம் அறிவுறுத்தியதுடன், நாளை வரை கொள்முதலை நிறுத்தியுள்ளனர்.

கூடலூர் பகுதியில் கடந்த 2ம் தேதி முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மமேற்பட்டா வீடுகள் சேதமடைந்துள்ளது. 250க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் மீட்கபட்டு முமகாம்களில் தங்க வைக்கப்ட்டுளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நான்கு நாட்களாக கூடலூர், பந்தலூர் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மின்சாரம், குடிநீர் சப்ளை இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். காம்புழா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று, காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வரும் மழையினால், பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரீல் மூழ்கியுள்ளன. முதல் மைல் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சளிவயல் பகுதியில் இரவு, நான்கு வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. அதில் சிக்கிய 12 பேரை, தீயணைப்பு மீட்டு அருகில் உள்ள வீடுகளில் தங்க வைத்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று பாதிப்புகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.

தலைப்புச்செய்திகள்