Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறந்தாங்கி அருகே கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு: பரபரப்பு

ஆகஸ்டு 07, 2020 08:08

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சிலோன் காலனியை சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பின்னர் அவரது உடல் அறந்தாங்கி கொண்டு வரப்பட்டு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்தவரை இங்கு தகனம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் கோட்டாட்சியர் முருகேசன் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னமராவதியில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த 4-ந் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருகில் உள்ள வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் முடிவு வருவதற்குள் அவர் இறந்தார். தற்போது பரிசோதனை முடிவு வெளிவந்ததில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற உறவினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலுப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டது. முன்னதாக அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 35 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரு ஆண் ஒரு பெண் என 2 பேருக்கு தொற்று உறுதியானதால் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பிய கீரனூரை அடுத்த மங்கத்தேவன்பட்டியை சேர்ந்த ஒரு பெண் மூலம் 10 வயது சிறுமி உள்பட 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் தொடர்பில் இருந்த மருதூரை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் மங்கதேவன்பட்டியை சேர்ந்த 5 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அங்கு மருத்துவ ஊழியர்கள் முகாமிட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். இதேபோல குளத்தூரில் ஒரு பெண் மற்றும் அவரது பேத்திக்கும் காந்திநகர் பகுதியில் ஒரு பெண்ணுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

அரிமளம் ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் நேற்று முன்தினம் கர்ப்பிணிகள் உள்பட பேரூராட்சி பணியாளர்கள்இ பொதுமக்கள் என 63 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளிவந்தநிலையில் பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் 3 பெண்களுக்கும் திருமயம் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் கே.செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் அவருடைய 17 வயது மகன் 13 வயது மகள் மற்றும் கே.புதுப்பட்டியை சேர்ந்த 49 வயதுடைய ஆண் என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கறம்பக்குடி பகுதியில் நேற்று பொன்விடுதியை சேர்ந்த 4 பேர் வாண்டான்விடுதியை சேர்ந்த 2 பேர் வெள்ளாளவிடுதி கெண்டையன்பட்டி புதுப்பட்டி கோட்டைக்காடு ஆகிய கிராமங்களில் தலா ஒருவர் என 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்