Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விபத்துக்கு முன் இருமுறை விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த விமானம்!

ஆகஸ்டு 08, 2020 05:33

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில், விபத்துக்கு முன்னர், விபத்துக்குள்ளான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் இரு முறை தரையிறங்க முயற்சித்த தகவல் வெளியாகி உள்ளது.

துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று(ஆக.,7) இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், இரு விமானிகள், ஒரு குழந்தை உட்பட 19 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், விபத்துக்கு முன்னர், இருமுறை தரையிறங்க முயற்சித்ததாக பிளைட்ரேடார்24 (FlightRadar24) எனும் விமானங்கள் தொடர்பான இணையதளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர், பல முறை வானில் வட்டமடித்துள்ளது. மேலும், இரு முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு விமான நிலையம் 'டேபிள் டாப்' வகை விமான நிலையம் ஆகும். 'டேபிள் டாப்' விமான நிலையங்களின் ரன்வே மலை மீது அல்லது உயரமான இடத்தில் இருக்கும். ரன்வே தாண்டி சென்றால், பள்ளம் இருக்கும் என்பதால், இங்கு விமானத்தை தரையிறக்குவது சவாலான காரியம்.

தலைப்புச்செய்திகள்