Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

9 மாவட்டங்களுக்கு கனமழை; கோவை, தேனிக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆகஸ்டு 08, 2020 06:14

சென்னை: 'நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மிக கன மழையும், ஆறு மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், ஐந்து நாட்களுக்கு மேலாக, இடைவிடாமல் கன மழை தொடர்கிறது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில், 36 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தென் மேற்கு பருவமழை, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடற்பகுதி யில் வலுவாக உள்ளது. அரபிக்கடல் பகுதியில், மிதமான நிலையில் உள்ளது.கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மாநிலங்களின் எல்லை பகுதிகளில் உள்ள, தமிழக மாவட்டங்களிலும், கன மழை பெய்கிறது.

இன்றைய வானிலையை பொறுத்தவரை, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில், ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதிக கன மழை பெய்யும்.60 கி.மீ., வேகம்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் வேலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழையும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிதமான மழையும் பெய்யும்.தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், அந்த பகுதிகளுக்கு, வரும், 11 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தேவாலா, 36; அவலாஞ்சி, 35; சின்னக்கல்லார், 31; சின்கோனா, 29, மேல் பவானி, 26; பந்தலுார், 25; சோலையார், 24; வால்பாறை, 23; நடுவட்டம், 22; பெரியாறு, 20; தேக்கடி, 16; எமரால்டு, 9; கூடலுார், 7; பெருஞ்சாணி, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.ஊட்டி, செங்கோட்டை, பேச்சிப்பாறை, பாபநாசம், 5; தக்கலை, 4; கன்னியாகுமரி, 3; குளச்சல், 2; தென்காசி, ராதாபுரம், மணிமுத்தாறு, போடி, நத்தம், சிவகிரி, ஓமலுார், பெரியகுளம், ராஜபாளையம், பேராவூரணி மற்றும் ஆய்க்குடியில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்