Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரியில் பலத்த காற்றுடன் கனமழையால் சாலையில் விழுந்த ராட்சத மரங்கள்

ஆகஸ்டு 08, 2020 07:09

கூடலூர்: நீலகிரி மாவட்டத்துக்கு, வானிலை மையம் ரெட் அலர்ட் அபாய எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து, கூடலூர், பந்தலூர், மஞ்சூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் சாய்ந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று, பிற்பகல் முதல் மழை குறைந்து குடியிருப்பு, விவசாய நிலங்களில் சூழ்ந்த தண்ணீர் வடிய துவங்கியது. மக்கள் ஓரளவு நிம்மதி அடைய துவங்கியுள்ளனர். அதேநேரம், கடந்த ஐந்து நாட்ளாக, மின் சப்ளை துண்டிக்கபட்டு, கூடலூர், பந்தலூர் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், தொலைதொர்பு பாதிக்கப்பட்டும், குடிநீர் சப்ளை இன்றியும் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

நீலகிரியில், கடந்த நான்கு நாட்கள் வீசிய பலத்த காற்று, மழை நேற்று சற்று ஓய்ந்ததால், இரவு நேரங்களில் மிதமான மழை பெய்தது. காற்றின் வேகம் குறைந்தது. மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையில் ராட்சத மரம் சாலை குறுக்கே விழுந்தது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்து மிதமான மழை பெய்து வருகிறது. அமைச்சர்கள் ஆய்வுக்கு பின், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கூடலூர், இரும்புபாலம், கோழிகோடு சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், பாதுகாப்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.

இன்று (ஆக.,08) காலை நிலவரப்படி, தேவாலா - 341 மி.மீ., பந்தலூர் - 188 மி.மீ., செரங்கோடு - 181 மி.மீ., அவலாஞ்சி - 108 மி.மீ., நடுவட்டம் - 82 மி.மீ., மேல் பவானி - 65 மி.மீ., கூடலூர் - 79 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்