Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏர் இந்தியா பைலட் சாதே ஏற்கனவே ஒரு விமான விபத்திலிருந்து தப்பியவர்

ஆகஸ்டு 09, 2020 06:07

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தில் பலியான விமானி தீபக் சாதே (59) ஏற்கனவே விமான விபத்து ஒன்றிலிருந்து தப்பியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

துபாயிலிருந்து 191 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோட்டில் ஆக.7 ம் தேதி விபத்துக்குள்ளானது. அதில் விமானி தீபக் சாதே உள்பட 19 பேர் பலியாகினர். இந்நிலையில் சாதே குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீபக் சாதே 1990ம் ஆண்டு நடந்த விமான விபத்து ஒன்றிலிருந்து தப்பியுள்ளார். அந்த விபத்தில் அவருக்கு மண்டையோட்டு பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. ஆறு மாதங்கள் வரை சிகிச்சையில் இருந்துள்ளார். அவர் மீண்டும் பணியில் சேர முடியாது என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால் தனது மனவலிமையாலும், விமானத்தின் மீது கொண்ட பற்றாலும் மீண்டும் பயிற்சியில் சேர்ந்து பைலட்டாக பணியாற்ற துவங்கினார்.

இவர் குறித்து அவர் மைத்துனர் நிலேஷ் சாதே தனது முகநூல் பதிவில், ' தீபக் 36 வருடங்கள் அனுபவம் கொண்ட மிகச்சிறந்த பைலட் ஆவார். 1981 ம் வருடம் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து சிறந்த வீரருக்கான 'Sword of Honour' தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றவர். பின்னர் இந்திய விமானப்படையில் சேர்ந்து 22 ஆண்டுகள் வரை போர் விமானங்களை இயக்கியவர். இந்தியாவின் வந்தே பாரத் திட்டத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பதை மிகவும் பெருமையாக நினைத்தவர். இந்தியர்களை தாய்நாட்டிற்கு மீட்டு கொண்டு வருவதில் மகிழ்ச்சியுடன் இருந்தவர்' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் தீபக் சாதே ராணுவ குடும்பத்தினைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை பிரிகாடியர் வசந்த் சாதே, நாக்பூரில் தங்கி பணியாற்றினார். இவருடைய சகோதரர் விகாஷ் சாதே ராணுவத்தில் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றிய போது வீரமரணம் அடைந்தார். போவாய் நகரைச் சேர்ந்த தீபக் சாதேவுக்கு ஒரு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்