Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இ - பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது: மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்

ஆகஸ்டு 09, 2020 06:19

சென்னை :''சென்னையில், 'இ - பாஸ்' பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை அளித்து, பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இடைத்தரகர்களை நாட வேண்டாம்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.

சென்னை அயனாவரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசிய தாவது: கொரோனா பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி, ஒரு லட்சத்து, 7,109 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில், 87.5 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் இறப்பு விகிதம், 2.1 சதவீதமாக உள்ளது. அதை, 1.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில், கொரோனா தொற்று இரட்டிப்பாக எடுத்துக் கொள்ளும் காலம், ஆரம்பத்தில், 5 நாட்கள்; 14 நாட்கள்; 41 நாட்கள்; 64 நாட்கள் என, இருந்தது. தற்போது, 72.24 நாட்களாக அதிகரித்துள்ளது. அதாவது, இரண்டரை மாதங்கள் ஆகிறது. 'இ - பாஸ்' பெறுவதை, இரண்டு வகையில் எளிமைப்படுத்தி உள்ளோம். திருமணம், இறப்பு, மருத்துவத்துடன் தொழில் ரீதியாக வந்து செல்வதற்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து செல்வதற்கும், இணையத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல், 'இ - பாஸ்' பெற விண்ணப்பித்தால், குறுஞ்செய்தி வாயிலாக தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தும் நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, முறையாக, இ - பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, இடைத்தரகர்களை அணுக வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்