Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் கனமழை: அணைகளில் 1.5 லட்சம் கனஅடி நீர் திறப்பு

ஆகஸ்டு 09, 2020 06:23

மேட்டூர்: கர்நாடகா அணைகளில், 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து, 3ம் ஆண்டாக, மேட்டூர் அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், கபினி அணை நிரம்பியதால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 60 ஆயிரம் கன அடியாக இருந்த, உபரி நீர் திறப்பு, நேற்று, 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று முன்தினம், 30 ஆயிரம் கன அடியாக இருந்த, கே.ஆர்.எஸ்., அணை நீர் திறப்பு, நேற்று, 74 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர் இருப்பு, 40 டி.எம்.சி.,யாக உள்ளது. ஓரிரு நாளில் அணை நிரம்பும் என்பதால், அதன்பின் வரும் உபரி நீர் முழுமையாக, காவிரியாற்றில் வெளியேற்றப்படும். இதுதவிர, மைசூரு மாவட்டம், நுகு அணையில் இருந்து, நேற்று காவிரியில், 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கபினியில், 70 ஆயிரம், கே.ஆர்.எஸ்.,சில், 74 ஆயிரம், நுகுவில், 6,000 கன அடி என, 1.50 லட்சம் கன அடி நீர், காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், இன்று இரவு மேட்டூர் அணையை வந்தடையும்.

இதனால், வரும் நாட்களில், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும். கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் தொடர்ச்சியாக வருவதால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 43 ஆயிரம் கன அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. வினாடிக்கு, 1 லட்சம் கன அடி நீர் தொடர்ச்சியாக வரும் பட்சத்தில், மேட்டூர் அணை, ஒரு வாரத்தில் நிரம்பும்.

தலைப்புச்செய்திகள்